மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் சி.பி.ஐ. இயங்குகிறது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
|தனது மாநிலத்தில் அனுமதியை மீறி சி.பி.ஐ. விசாரிப்பதற்கான மேற்கு வங்காள அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
புதுடெல்லி,
மேற்கு வங்காள மாநிலத்தில் விசாரணை நடத்துவதற்கும், சோதனை நடத்துவதற்கும் சி.பி.ஐ. க்கு அளிக்கப்பட்டிருந்த பொது அனுமதியை கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி மேற்கு வங்காள மாநில அரசு திரும்பப்பெற்றது. ஆனால் அதன்பிறகும் சந்தேஷ்காலி வன்முறை உள்ளிட்ட வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
எனவே, சி.பி.ஐ. விசாரிப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேற்கு வங்காள மாநில அரசு மனுதாக்கல் செய்தது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான சர்ச்சைகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் சாசனத்தின் 131-வது பிரிவின்கீழ், இந்த மனுவை தாக்கல் செய்தது.
ஆனால், மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சி.பி.ஐ. , மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்று வாதிட்டார். மத்திய அரசுக்கு சம்பந்தம் இல்லாத மனு, விசாரணைக்கு உகந்தது அல்ல என்று அவர் கூறினார்.
மேற்கு வங்காள அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், பொது அனுமதியை திரும்பப்பெற்ற பிறகு, மேற்கு வங்காளத்துக்குள் சி.பி.ஐ. எப்படி நுழையலாம்? என்று வாதிட்டார்.
இந்நிலையில், இம்மனு மீது நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. மேற்கு வங்காள அரசின் மனு விசாரணைக்கு உகந்தது என்று தீர்ப்பு கூறியதுடன், மத்திய அரசின் ஆட்சேபனையை நிராகரித்தது.
74 பக்க தீர்ப்பில் நீதிபதிகள் கூறுகையில், "1946-ம் ஆண்டின் டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன சட்டத்தின்படி, மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் சி.பி.ஐ. அது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது.
டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன சட்டப்படி, ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வரும் குற்ற வழக்குகள், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் (சி வி சி.) கட்டுப்பாட்டில் வரும். மற்ற குற்ற வழக்குகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும்.
யூனியன் பிரதேசத்தை தவிர, இதர மாநிலங்களில் விசாரணை அமைப்புகளின் அதிகாரத்தையோ, விசாரணை வரம்பையோ நீட்டிக்க வேண்டுமானால் மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் செய்ய முடியாது. அதற்கு அந்த மாநில அரசின் ஒப்புதலும் அவசியம். ஆகவே, சி.பி.ஐ. விசாரிப்பதற்கு எதிரான மேற்கு வங்காள அரசின் மனு விசாரணைக்கு உகந்தது" என்று நீதிபதிகள் கூறினர். பின்னர் மனு மீதான விசாரணையை ஆகஸ்டு 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.