ரெயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கு: ராப்ரிதேவியிடம் சி.பி.ஐ. விசாரணை
|ரெயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், லாலு மனைவி ராப்ரி தேவியிடம் விசாரணை நடத்தினர்.
பாட்னா,
கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ராஷ்டிரீய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவ், ரெயில்வே மந்திரியாக இருந்தாா.
அப்போது, ரெயில்வேயில் வேலை அளிப்பதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக லாலு குடும்ப உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பாட்னாவை சேர்ந்த பலர், பல்வேறு ரெயில்வே கோட்டங்களில் குரூப் டி பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர்.
அதற்கு பிரதி உபகாரமாக, அவர்களது நிலங்கள், லாலு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏ.கே.இன்போசிஸ்டம் என்ற நிறுவனத்தின் பெயர்களில் மாற்றப்பட்டன. பின்னர் அந்த நிறுவனத்தை லாலு குடும்ப உறுப்பினர்கள் கையகப்படுத்தினர்.
குடும்பத்தினர் பெயரில் மாற்றம்
பாட்னாவில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 292 சதுர அடி நிலங்கள், 5 கிரய பத்திரம், 2 தான பத்திரங்கள் மூலம் லாலு குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் மாற்றப்பட்டன. அதற்கான பணம், ரொக்கமாக தரப்பட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த நிலங்களின் அப்போதைய வழிகாட்டி மதிப்பு ரூ.4 கோடியே 39 லட்சம். ஆனால், சந்தை மதிப்பு அதைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது.
ரெயில்வேயின் பணி நியமன விதிமுறைகள் பின்பற்றப்படாததுடன், அந்த நபர்கள் நிரந்தரமும் செய்யப்பட்டனர்.
சம்மன்
இதுதொடர்பாக லாலுபிரசாத் யாதவ், அவருடைய மனைவியும், முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி, இளைய மகனும், துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் 15-ந் தேதி ஆஜராக அவர்களுக்கு சமீபத்தில் 'சம்மன்' அனுப்பப்பட்டது.
விசாரணை
இந்தநிலையில், இவ்வழக்கில் மேல்விசாரணைக்காக பாட்னாவில் உள்ள லாலுபிரசாத் யாதவ் வீட்டுக்கு நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சென்றது. அந்த வீடு, முதல்-மந்திரியின் அதிகாரபூர்வ இல்லத்துக்கும், கவர்னர் மாளிகைக்கும் அருகில் உள்ளது.
அப்போது, ராப்ரி தேவியும், மூத்த மகனும், பீகார் மந்திரியுமான தேஜ் பிரதாப் யாதவும் வீட்டில் இருந்தனர். தேஜஸ்வி யாதவ், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தார்.
ராப்ரி தேவியிடம் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சில கூடுதல் ஆவணங்களை கேட்டனர்.மற்றபடி, வீட்டில் சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிது நேரம் வீட்டில் இருந்த தேஜ் பிரதாப் யாதவும் பின்னர் சட்டசபைக்கு சென்று விட்டார்.
பா.ஜனதா கருத்து
இதற்கிடையே, இந்த விசாரணை தொடர்பாக பீகார் மாநில பா.ஜனதா மூத்த தலைவர்கள் நிதின் நபின், ஜிபேஷ் குமார் மிஸ்ரா ஆகியோர் கூறியதாவது:-
சி.பி.ஐ.க்கும், லாலுவுக்கும் இடையே நீண்ட கால தொடர்பு உள்ளது. அவர் தண்டனை பெற்ற கால்நடைத்தீவன ஊழல் வழக்கு, அவர் இடம்பெற்ற ஐக்கிய முன்னணி ஆட்சியில்தான் தொடரப்பட்டது. அவர் மீது புகார் கொடுத்த சிவானந்த் திவாரி, தற்போது அவரது கட்சியில்தான் இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில்தான் தண்டனை கிடைத்தது.
எனவே, அரசியல் பழிவாங்கல் என்பது தவறான குற்றச்சாட்டு. சி.பி.ஐ., சுதந்திரமான அமைப்பு. அது தனது கடமையை செய்கிறது. லாலு குடும்பம், தாங்கள் விதைத்ததை அறுவடை செய்து கொண்டிருக்கிறது என்று அவர்கள் கூறினர்.