< Back
தேசிய செய்திகள்
புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமரை விமர்சித்த காஷ்மீர் முன்னாள் கவர்னருக்கு சி.பி.ஐ. சம்மன்
தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமரை விமர்சித்த காஷ்மீர் முன்னாள் கவர்னருக்கு சி.பி.ஐ. சம்மன்

தினத்தந்தி
|
21 April 2023 4:02 PM GMT

முன்னாள் காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

ஸ்ரீநகர்,

கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை ஜம்மு காஷ்மீர் கவர்னராக இருந்தவர் சத்யபால் மாலிக். இவர் கவர்னராக இருந்தபோது நீர்மின் திட்டம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்க லஞ்சம் தர சில நிறுவனங்கள் முன்வந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் சி.பி.ஐ. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் இது தொடர்பாக சி.பி.ஐ. அவரை தற்போது விசாரணைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யபால் மாலிக், "இந்த வழக்கு தொடர்பான சில விஷயங்களை தெளிவுபடுத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி சி.பி.ஐ. கூறியுள்ளது. நான் ராஜஸ்தான் செல்ல இருப்பதால், ஏப்ரல் 27 முதல் 29 வரையிலான தேதிகளில் ஆஜராக உள்ளதாக அவர்களிடம் தெரிவித்துள்ளேன்" என்று கூறினார்.

மேலும் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "உண்மையைப் பேசி சிலரின் பாவங்களை வெளிக்கொணர்ந்திருக்கிறேன். அதனால் அழைப்பு வந்திருக்கலாம். நான் ஒரு விவசாயியின் மகன், நான் பயப்பட மாட்டேன். நான் உண்மையின் பக்கம் நிற்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் சத்யபால் மாலிக், துணை ராணுவப் படையினர் 40 பேர் உயிரிழந்த புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து பேசினார். அப்போது அவர் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டரில் பயணிக்க அனுமதி கோரியதாகவும், ஆனால், உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்காததால் அவர்கள் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக பேருந்தில் பயணித்ததாகவும், அதனை அடுத்தே அவர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கானதாகவும் தெரிவித்திருந்தார்.

அதோடு, புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்கு வழிவகுத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியம் குறித்து பேச வேண்டாம் என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாகவும் மாலிக் தெரிவித்திருந்தது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்