கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் முதல்வர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
|ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வருகிறது.
கொல்கத்தா,
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மருத்துவமனையின் சிசிடிவி காட்சி, ப்ளூடூத் கருவி ஆகியவற்றின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் இது குறித்து தற்போது சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது.
இதனிடையே கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் படுகொலை சம்பவத்தின் போது, மருத்துவமனை முதல்வராக இருந்தவர் சந்தீப் கோஷ். சந்தீப் கோஷ் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனைத்தொடர்ந்து சந்தீப் கோஷ் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில் சந்தீப் கோஷ் மீது சி.பி.ஐ. நேற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்து ஊழல் விசாரணையை தொடங்கியது.
இந்நிலையில் கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வருகிறது. ஊழல் புகார் தொடர்பாக 15க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ .அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.