உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆள் தேர்வில் ஊழல்: மேற்கு வங்காள மந்திரி, எம்.எல்.ஏ. வீடுகளில் சி.பி.ஐ. சோதனை
|உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்ததில் ஊழல் நடந்ததாக கூறப்படும் வழக்கில், மேற்கு வங்காள மந்திரி மற்றும் எம்.எல்.ஏ. வீடுகள் உள்பட 12 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது.
1,500 பேர் நியமனம்
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுமார் 1,500 ஊழியர்கள், பணம் கொடுத்து நியமனம் பெற்றதாக சர்ச்சை எழுந்தது. இதுபற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அதாவது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆள்தேர்வு தொடர்பான அனைத்து பணிகளும் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
12 இடங்களில் சி.பி.ஐ. சோதனை
அந்த நிறுவனம், கேள்வித்தாள் தயாரித்தல், அச்சிடுதல், விடைத்தாள் திருத்துதல், ஆட்கள் இறுதிப்பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை செய்தது. அரசு ஊழியர்களுடன் சேர்ந்து சதி செய்து, பணம் கொடுத்தவர்கள் பெயர்களை இறுதி பட்டியலில் இடம்பெற செய்தது. இந்த ஊழல் தொடர்பாக, மேற்கு வங்காளத்தில் நேற்று 12 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. மேற்கு வங்காள நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி பிர்ஹத் ஹக்கிமுக்கு சொந்தமான 2 இடங்களும் அடங்கும்.
கொல்கத்தாவில் சேட்லா பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு மத்திய படைகள் புடைசூழ சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர். 2 சி.பி.ஐ. அதிகாரிகள், பிர்ஹத் ஹக்கிமிடம் விசாரணையும் நடத்தியதாக சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போராட்டம்
பிர்ஹத் ஹக்கிம் வீடு முன்பு குவிந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், சோதனை நடவடிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்தினர். பிர்ஹத் ஹக்கிம், மூத்த மந்திரி ஆவார். அவர் கொல்கத்தா மேயராகவும் இருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விவகாரங்களில் செல்வாக்கு மிக்கவராகவும் வலம் வருகிறார்.
எம்.எல்.ஏ.
சோதனை நடத்தப்பட்ட இடங்களில், வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டம் கமர்ஹட்டி தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா வீடுகளும் அடங்கும். அவர் முன்னாள் மந்திரியும் ஆவார். கமர்ஹட்டி நகராட்சிக்கு ஆள் தேர்வு செய்ததில் அவர் முக்கிய பங்கு வகித்தது தெரிய வந்ததால் இச்சோதனை நடந்தது. மேலும், முன்னாள் நகராட்சி தலைவர்கள், அரசு ஊழியர்கள் வீடுகள் உள்பட 12 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடந்தது.
குற்றச்சாட்டு
''கவர்னர் மாளிகைக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் வகையில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டுள்ளது'' என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் குற்றம் சாட்டினார்.
இதை மறுத்த பா.ஜனதா செய்தித்தொடர்பானர் சமிக் பட்டாச்சார்யா, ''மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால், திரிணாமுல் காங்கிரஸ் பயப்படுவது ஏன்?'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
சி.பி.ஐ. சோதனைக்கு உள்ளான பிர்ஹத் ஹக்கிம், மதன் மித்ரா ஆகியோர் ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு 'நாரதா' ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். மதன் மித்ரா, சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.