லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
|ரெயில்வேயில் வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில், லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனைகளை நடத்தியது.
பாட்னா,
'வேலைக்கு நிலம் ஊழல்'
மத்தியில் 2004-09 கால கட்டத்தில் மன்மோகன்சிங் அரசில் ரெயில்வே மந்திரியாக இருந்தவர், ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத். அப்போது அவர் ரெயில்வே துறையில் வேலை வழங்குவதற்காக தனது குடும்பத்தினர் பெயரில் நிலங்களை லஞ்சமாக பெற்றார் என ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சம்பவம் நடந்து 13 ஆண்டுகளான நிலையில், லாலு பிரசாத், மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி, ஹேமா பாரதி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.
அதிரடி சோதனை
இந்த ஊழலில் லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 25 இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிரடி சோதனைகள் நடத்தியது. இந்த சோதனைகள் டெல்லி, குருகிராம், பாட்னா, மதுபானி, கதிஹார் உள்ளிட்ட நகரங்களில் நடந்தன. குருகிராமில், பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவுக்கு சொந்தமான நிறுவனத்தால் கட்டப்பட்டு வருவதாக நம்பப்படுகிற ஒரு வணிக வளாகத்திலும், லாலு பிரசாத்துக்கு நெருக்கமான எம்.எல்.சி. சுனில் சிங், மாநிலங்களவை எம்.பி.க்கள் ஆஷ்பக் கரீம், பயஸ் அகமது மற்றும் முன்னாள் எம்.எல்.சி. சுபோத் ராய்க்கு சொந்தமான இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனைகள் நடத்தினர்.
பீகார் சட்டசபையில், முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி அரசு நேற்று நம்பிக்கை தீர்மானத்தை சந்தித்த நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த சோதனைகளை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆச்சரியம் இல்லை என கருத்து
இது தொடர்பாக ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் சக்தி சிங் யாதவ் கருத்து கூறும்போது, "இதைக்கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. நேற்று இரவுதான் டுவிட்டரில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானத்துறை அதிகாரிகள் பீகாரில் அடுத்த கட்டமாக சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என குறிப்பிட்டிருந்தேன்" என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆசித் நாத் திவாரி கருத்து கூறுகையில், "சர்வாதிகாரிகளான ஹிட்லரோ, முசோலினியோ என்றென்றும் அதிகாரத்தில் நீடிக்கவில்லை என்பதை சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.