டெல்லி துணை முதல் மந்திரி வங்கி லாக்கரில் சோதனை செய்த சிபிஐ அதிகாரிகள்
|இந்த சோதனையின்போது துணை முதல் மந்திரி சிசோடியா மற்றும் அவரது மனைவி இருவரும் வங்கியில் இருந்தனர்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் ஆட்சி செய்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அரசு மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதையடுத்து துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் கடந்த 19-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டெல்லி புறநகர் பகுதியான காஜியாபாத்தில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கி கிளையில் மணீஷ் சிசோடியா லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர்.
இந்த சோதனையின்போது சிசோடியா மற்றும் அவரது மனைவி ஆகியோர் வங்கியில் இருந்தனர். இந்த சோதனை குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் வங்கி முன்பு திரண்டனர். செய்தியாளர்களும் அங்கு கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
முன்னதாக இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த சிசோடியா எனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை போல வங்கி லாக்கர் சோதனையிலும் எதுவும் கிடைக்காது என தெரிவித்திருந்தார். சிபிஐ அதிகாரிகள் வரவேற்பதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.