< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தை உலுக்கிய மருத்துவ மாணவி மர்மசாவு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
|27 Jan 2023 3:13 AM IST
உத்தரபிரதேசத்தை உலுக்கிய மருத்துவ மாணவி மர்மசாவு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தின் பரெய்லி மாவட்டத்தில், 19 வயதான மாணவி அனன்யா தீக்சித் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். அவர் 2017-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ந்தேதி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். மாணவியின் இந்த மரணம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவியின் மரணத்தில் நிலவிய மர்மங்களை வெளிக்கொண்டுவர, 2 விசாரணை அமைப்புகள் அமைக்கப்பட்டன. அவை சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தன. இரண்டிலும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகள் கூறப்பட்டிருந்தன.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் சதன்சு துலியா அமர்வு, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவு பிறப்பித்தது.