'நீட் முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை' - காங்கிரஸ் வலியுறுத்தல்
|நீட் முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,
2024-25ம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்வு எழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு 67 பேர் நீட் தேர்வில் 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக ஒரே கல்வி மையத்தில் இருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
இதனை கண்டித்து மாணவர்கள் போராட்டதில் ஈடுபட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்நிலையில் நீட் முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது மட்டுமே பிரச்சினை கிடையாது. இதுதவிர பல்வேறு முறைகேடுகளும், வினாத்தாள் கசிவுகளும், ஊழல்களும் நடந்துள்ளன. நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். மோடி அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு தயாராக இல்லை என்றால், சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் நியாயமான விசாரணையை நடத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகாய் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேசிய தேர்வு முகமையின் தலைமையில்தான் இந்த முறைகேடுகள் அனைத்தும் நடந்துள்ளன. அவர்களிடம் எப்படி நாம் நியாயமான விசாரணையை எதிர்பார்க்க முடியும்? இந்த நாட்டின் 24 லட்சம் மாணவர்களுடைய எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை ஆகும்" என்று தெரிவித்தார்.