< Back
தேசிய செய்திகள்
ஜெயின் துறவி கொலையில் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பேட்டி
தேசிய செய்திகள்

ஜெயின் துறவி கொலையில் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பேட்டி

தினத்தந்தி
|
11 July 2023 12:15 AM IST

ஜெயின் துறவி கொலையில் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெலகாவியில் ஜெயின் துறவி கொலை வழக்கில் தவறு செய்தவர்களை போலீசார் உடனே கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அதனால் சி.பி.ஐ. உள்பட வேறு அமைப்புகளின் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இதுகுறித்த விசாரணையில் பாகுபாடு காட்டப்படுவதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் போலீசார் தங்களுக்கு புகார் வந்ததும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். போலீசார் விரைந்து செயல்பட்டு தவறு செய்தவர்களை கைது செய்துள்ளனர். இதற்காக போலீசாரை பாராட்டுகிறேன். இந்த சம்பவத்தை கண்டித்து உப்பள்ளியில் ஜெயின் துறவிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களுடன் நான் பேசினேன். போலீசார் விசாரணை முடிவடைந்த பிறகு உண்மைகள் வெளிவரும். வெறுமனே போலீசார் மீது குற்றம்சாட்டுவது சரியல்ல. போலீசார் எந்த நெருக்கடியும் இல்லாமல் சட்டப்படி பணியாற்றுகிறார்கள். எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் பா.ஜனதாவில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அக்கட்சியில் உள்கட்சி மோதல் இருப்பது தெரிகிறது.

கர்நாடக சட்டசபை கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் இல்லாமல் நடந்து வருகிறது. பா.ஜனதாவினருக்கு எந்த அளவுக்கு பொறுப்புணர்வு உள்ளது என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

மேலும் செய்திகள்