< Back
தேசிய செய்திகள்
அமலாக்கத்துறையினரை தாக்கிய வழக்கு - ஷேக் ஷாஜகானுக்கு மேலும் 4 நாட்கள் சி.பி.ஐ. காவல் நீட்டிப்பு

Image Courtesy : ANI

தேசிய செய்திகள்

அமலாக்கத்துறையினரை தாக்கிய வழக்கு - ஷேக் ஷாஜகானுக்கு மேலும் 4 நாட்கள் சி.பி.ஐ. காவல் நீட்டிப்பு

தினத்தந்தி
|
10 March 2024 5:33 PM IST

ஷேக் ஷாஜகானின் சி.பி.ஐ. காவலை மேலும் 4 நாட்கள் நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஷாஜகான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், சந்தேஷ்காளி பகுதியில் உள்ள பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவர்களுடைய நிலங்களை அபகரித்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக ஷேக் ஷாஜகானின் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த ஷேக் ஷாஜகான் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே ஷேக் ஷாஜகானை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்வதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 5-ந்தேதி ரேஷன் விநியோக முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே கடந்த 8-ந்தேதி சந்தேஷ்காளியில் உள்ள ஷேக் ஷாஜகானின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் பாசிரத் கோர்ட்டில் இன்று ஷேக் ஷாஜகானை ஆஜர்படுத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், அவரிடம் மேலும் விசாரணை நடத்த அவகாசம் கோரினர். இதையடுத்து ஷேக் ஷாஜகானின் சி.பி.ஐ. காவலை மேலும் 4 நாட்கள் (14-ந்தேதி) வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்