< Back
தேசிய செய்திகள்
ஏர் இந்தியா ஊழல் வழக்கை மூடிய சி.பி.ஐ.; மன்மோகன் சிங்கிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ்
தேசிய செய்திகள்

ஏர் இந்தியா ஊழல் வழக்கை மூடிய சி.பி.ஐ.; மன்மோகன் சிங்கிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ்

தினத்தந்தி
|
31 March 2024 11:58 AM IST

பிரதமர் மோடி மன்மோகன் சிங்கிடமும், நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விமான போக்குவரத்துத்துறை மந்திரியாக பிரபுல் பட்டேல் இருந்த சமயத்தில், அப்போது பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவுக்கு விமானங்களை குத்தகைக்கு எடுத்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை முடித்து வைப்பதாக டெல்லி சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "கடந்த 2014-ம் ஆண்டு ஏர் இந்தியா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான சி.ஏ.ஜி. அறிக்கையை வைத்துக்கொண்டு பிரதமர் மோடி, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மீது பல்வேறு போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவை அனைத்தும் அரசியல் அறிக்கைகளே தவிர சி.ஏ.ஜி. அறிக்கைகள் கிடையாது என்பது பிரபுல் பட்டேல் மீதான வழக்கை சி.பி.ஐ. முடித்து வைத்ததன் மூலம் உறுதியாகியுள்ளது. பிரபுல் பட்டேல் பா.ஜ.க.வின் வாஷிங் மெஷினில் நுழைந்த பிறகு சுத்தமாகி விட்டார். பிரதமர் மோடி மன்மோகன் சிங்கிடமும், நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்."

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்