ரூ.966 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கிய நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
|லஞ்சப் புகார் தொடர்பாக மேகா எஞ்சினீயரிங் நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியலை கடந்த மார்ச் 21-ந்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் அதிக தொகைக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பட்டியலில் ஐதராபாத்தைச் சேர்ந்த மேகா எஞ்சினீயரிங் நிறுவனம் 2-வது இடத்தில் இருந்தது.
இந்த நிறுவனம் ரூ.966 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்த நிறுவனம் பா.ஜ.க.வுக்கு ரூ.586 கோடி, பி.ஆர்.எஸ். கட்சிக்கு 195 கோடி, தி.மு.க.வுக்கு ரூ.85 கோடி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 37 கோடி, தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ.25 கோடி, காங்கிரஸ் கட்சிக்கு 17 கோடி, ஜே.டி.-எஸ், ஜே.டி.-யூ மற்றும் ஜனசேனா ஆகிய கட்சிகளுக்கு ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை நன்கொடை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், ஜக்தல்பூர் ஒருங்கிணைந்த உருக்கு ஆலை பணிகள் தொடர்பாக மேகா எஞ்சினீயரிங் நிறுவனத்தின் ரூ.174 கோடி நிலுவைத் தொகையை சரிசெய்வதற்கு ரூ.78 லட்சம் லஞ்சம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகார் தொடர்பாக தேசிய கண்டுபிடிப்பு மற்றும் தொடக்கக் கொள்கை(NISP), தேசிய கனிம வளர்ச்சிக் கழகம்(NMDC)-ஐ சேர்ந்த 8 அதிகாரிகள் மற்றும் மேகான்(MECON) நிறுவனத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சந்திரா மற்றும் மேகா எஞ்சினீயரிங் ஆகிய நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.