கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 33 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
|கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு இருக்கிறது.
மைசூரு:
கர்நாடகத்தில் சில வாரங்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் ஏரி,குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பின.
தற்போது மழை குறைந்துள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. இதன்காரணமாக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலை நிலவரப்படி 124.68 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 20,864 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 18,098 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதேபோல், கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று முழு கொள்ளளவில் தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16,048 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 33,098 கனஅடி தண்ணீர் காவிரியில் தமிழகத்துக்கு செல்கிறது.