< Back
தேசிய செய்திகள்
கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படவில்லை -  டி.கே.சிவக்குமார்
தேசிய செய்திகள்

'கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படவில்லை' - டி.கே.சிவக்குமார்

தினத்தந்தி
|
19 Aug 2023 12:15 AM IST

கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படவில்லை என விமர்சனத்திற்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பதிலளித்துள்ளார்.

பெங்களூரு:

கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படவில்லை என விமர்சனத்திற்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பதிலளித்துள்ளார்.

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சகஜம் தான்

காவிரி பிரச்சினையில் கோர்ட்டு, சட்டம், அரசியல் சாசனத்தை நாம் மதிக்க வேண்டும். இதற்கு முன்பு இருந்த அரசுகளும் கோர்ட்டு உத்தரவை மதித்து தண்ணீரை திறந்து விட்டுள்ளன. ஆனால் நமது விவசாயிகளின் நலனை காப்பது எங்கள் மீது உள்ள மிகப்பெரிய பொறுப்பு. தண்ணீர் திறந்து விட்டுள்ளதை கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இது சகஜம் தான். இத்தகைய நேரத்தில் அரசு சமநிலையில் செயல்பட வேண்டியுள்ளது. கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கவில்லை. கோர்ட்டு உத்தரவை மதித்து தண்ணீர் திறந்துள்ளோம். அதே போல் கர்நாடக விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

புள்ளி விவரங்கள்

மழை குறைவாக பெய்துள்ளதால் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் அந்த ஆணையத்திடம் கேட்டுள்ளோம். இதற்கு முன்பு இத்தகைய நெருக்கடியான நேரத்தில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் எவ்வளவு நீரை திறந்துவிட்டது என்பது குறித்த புள்ளி விவரங்களை எங்களால் வழங்க முடியும்.

ஆனால் இதில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. காவிரி, மகதாயி, கிருஷ்ணா விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளோம். மத்தியில் உறுதியான அரசு இருந்தும், மகதாயி, கிருஷ்ணா நதிநீர் விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை. இதுகுறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

தேசிய கல்வி கொள்கை

தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்வோம் என்று நாங்கள் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தோம். முந்தைய பா.ஜனதா அரசு உரிய கட்டமைப்புகள் இல்லாமல் அவசரகதியில் இந்த கொள்கையை அமல்படுத்தியது. இந்த கொள்கையை கர்நாடகத்தில் மட்டும் அமல்படுத்தியது ஏன்?. பா.ஜனதா ஆளும் குஜராத், அரியானா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேச மாநிலங்களில் அதை செயல்படுத்தாதது ஏன்?.

தேசிய கல்வி கொள்கையில் நல்ல அம்சங்கள் இருந்தால் அதை எடுத்துக் கொள்வோம். இந்த கொள்கை பா.ஜனதாவின் அரசியல் தந்திரம். தேசிய கல்வி கொள்கை என்றால் நாக்பூர் கல்வி கொள்கை என்பதாகும். கல்வி மாநிலத்தின் விஷயங்களை உள்ளடக்கியது. அதனால் மத்திய அரசின் கொள்கைகளை சேர்க்க முடியாது. வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்ளும்படி எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

யாருக்கும் தெரியாது

உள்ளூர் அளவில் பிற கட்சியினரை கட்சியில் சேர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளோம். இதுவரை பிற கட்சி நிர்வாகிகள் கட்சியில் சேருவது குறித்து எந்த தகவலும் இல்லை. நான் பிற கட்சியினரிடம் பேசவில்லை. ஆனால் பா.ஜனதாவினர் பிற கட்சியினரிடம் பேசியுள்ளனர். அதுபற்றி நீங்கள் பேசுவது இல்லை. பூனை கண்களை மூடிக்கொண்டு பால் குடித்தால் யாருக்கும் தெரியாது என்று பா.ஜனதாவினர் நினைக்கிறார்கள்.

அவா்கள் கற்பித்த பாடம் எங்களுக்கு இன்னும் நினைவில் உள்ளது. மக்கள் எங்களுக்கு 135 இடங்கள் கொடுத்துள்ளனர். அதனால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுகிறோம். பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினருக்கு நிம்மதி இல்லை. அதற்கு அவர்களே மருந்து கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு ஆதரவு வழங்குவது பற்றி எனக்கு தெரியாது. எனக்கு 224 எம்.எல்.ஏ.க்களும் பழக்கம் தான். அவர்களுடன் எனக்கு தனிப்பட்ட முறையில் நட்பு உள்ளது. அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த மாட்டேன். அரசியலில் எதுவும் நடக்கலாம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்