தமிழ்நாட்டுக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்தே ஆக வேண்டும் - கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
|தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்தே ஆக வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
புதுடெல்லி,
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கடந்த 11-ந் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையையும், கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பையும் கருத்தில் கொண்டு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசை வலியுறுத்தப்பட்டது. இது காவிரி மேலாண்மை ஆணையத்திலும் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் கர்நாடக அரசு அதற்கு தயக்கம் காட்டியது. இதனால் காவிரி மேலாண்மை ஆணையம் அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.
அதன்படி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இது ஆணையத்தின் 26-வது கூட்டம் ஆகும். கூட்டத்துக்கு ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமை தாங்கி னார். காவிரியோடு தொடர்புடைய 4 மாநில அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றனர். கர்நாடகத்தின் சார்பில் அந்த மாநில நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராகேஷ் சிங் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது. கூட்டத்தில், 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்ததை மறுபரிசீலனை செய்யுமாறு கர்நாடகம் வலியுறுத்தியது. அத்துடன் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு வேண்டும் என்றால், மேகதாது அணை அவசியம் என்றும், அதுபற்றி கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் கர்நாடக அதிகாரிகள் வாதிட்டனர்.
ஆனால் தமிழ்நாடு அதிகாரிகள் அதை மறுத்து, தமிழ்நாட்டுக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீரை கேட்டனர். அதைப் போல, மேகதாது பற்றி விவாதிக்கவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார், ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டே ஆக வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
கூட்டத்தில் கர்நாடகம் விடுத்த கோரிக்கையை ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுகுறித்து கர்நாடக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ராகேஷ் சிங், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்தோம். மேலும், மேகதாது பற்றி விவாதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் மேகதாது அணை தொடர்பாக வாய்மொழியாக பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. கர்நாடகாவின் எல்லைக்குள் அணை கட்டுவதை ஏன் தடுக்க வேண்டும் என்று கேள்வியும் எழுப்பப்பட்டது. வறட்சிக்காலத்தில் அந்த அணை மூலம் பயன்பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது கர்நாடக அணைகளில் 56 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. அதில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தில் தற்போது லேசாக மழை பெய்து வருவதால் தண்ணீர் திறந்துவிடுவதில் எந்த சிரமமும் இருக்காது என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.