காவிரி நீர் வழக்கில் சட்ட போராட்டம் - முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
|காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து ஆலோசிக்க பெங்களூரு விதான சவுதாவில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
பெங்களூரு,
கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு, அம்மாநில விவசாயிகள் மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் காவிரியில் கூடுதல் நீர் திறந்து விட கோரி தமிழக அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், காவிரி வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்தார்.
அதன்படி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகிய 3 பேர் அடங்கிய புதிய அமர்வை காவிரி வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. இந்த வழக்கு 57 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், வரும் 25ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் புதிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து ஆலோசிக்க பெங்களூரு விதான சவுதாவில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரியும் பாஜக தலைவருமான பிஎஸ் எடியூரப்பா, ஜேடி(எஸ்) தலைவர் எச்டி குமாரசாமி, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, மக்களவை எம்பி சுமலதா அம்பரீஷ் மற்றும் பல தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
"காவிரி நதிநீர் வழக்கில் சட்ட போராட்டம் நடத்துவோம். சட்டப்போராட்டம் நடத்த அனைத்து கட்சிகூட்டத்தில் ஒத்துழைப்பு தந்துள்ளனர். ஒருமித்த கருத்துடன் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தரப்பு வாதத்தை வைப்போம். தமிழகத்திற்கு உரிய நீர் தருவதற்குதான் மேகதாது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்" என்று கூறினார்.