டெல்லியில் ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம்
|காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்வதில் தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெற தமிழக அரசு சட்ட போராட்டம் நடத்தி வருகிறது. இந்த பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 28 கூட்டங்கள் நடந்துள்ளன.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் வரும் ஏப்ரல் 4ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 21ம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு 2.8 டி.எம்.சி. நீரை திறக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பெங்களூரு குடிநீர் தேவைக்காக, காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வேண்டும் என கர்நாடகா கோரிக்கை வைத்துள்ளது. கர்நாடகாவின் இந்த கோரிக்கைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக காவிரி மேலாண்மை கூட்டம் கடந்த மாதம் 1ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.