காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து விவாதம்
|வருகிற 23-ந் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரியை சந்தித்த பிறகு கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறினார்.
பெங்களூரு
வருகிற 23-ந் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரியை சந்தித்த பிறகு கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறினார்.
மேகதாது திட்டம்
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அணை ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக திட்ட வரைவு அறிக்கையும் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அணை திட்டத்திற்காக கர்நாடக பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் கர்நாடக அரசின் முடிவுக்கு தடை கேட்டு தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கலும் செய்துள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
ஆனால் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்கப்பட இருந்தது. ஆனால் அந்த கூட்டம் வருகிற 23-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதால் அன்றைய தினம் மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்திய மந்திரியுடன் சந்திப்பு
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்கக்கூடாது என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்கும் முடிவில் கர்நாடக அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் நேற்று டெல்லிக்கு சென்றார். அங்கு அவர் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். அப்போது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அத்துடன் இந்த அணை திட்டத்திற்கு விரைவில் அனுமதி வழங்கவும் கோரிக்கை விடுத்தார்.
பத்ரா மேலணை திட்டம்
இதையடுத்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை, மந்திரி கோவிந்த் கார்ஜோள் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க கோரி ஒரு கடிதத்தை கோவிந்த் கார்ஜோள் வழங்கினார்.
அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக பத்ரா மேலணை திட்டத்தின் கீழ் 29.90 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நீரைக் கொண்டு சிக்கமகளூரு, சித்ரதுர்கா, துமகூரு, தாவணகெரே மாவட்டங்களில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 515 எக்டேர் அதாவது 5 லட்சத்து 57 ஆயிரத்து 22 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.
வரைவு அறிக்கை
மேலும் அந்த மாவட்டங்களில் 367 ஏரிகளை நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க அனைத்து தகுதியும் உள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பல்வேறு துறைகள் அனுமதி வழங்கியுள்ளன. இந்த நிலையில் மத்திய ஜல்சக்தித்துறை, ஒரு வரைவு அறிக்கையை தயாரித்து பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்கலாம் என்று கூறி மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த திட்டத்தின் திட்ட செலவு ரூ.21 ஆயிரத்து 473 கோடி ஆகும். இது தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகு மத்திய அரசு ரூ.16 ஆயிரத்து 125 கோடி ஒதுக்கும். மத்திய மந்திரிசபை விரைவில் இதற்கு ஒப்புதல் வழங்கும். இதுகுறித்து விவாதிக்கவே நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினேன்.
மேகதாது திட்டம்
மேலும் மேகதாது திட்டம் குறித்து கஜேந்திரசிங் ஷெகாவத்துடன் விரிவாக பேசினோம். இந்த மேகதாது திட்டம் குறித்து வருகிற 17-ந் தேதிக்கு பதிலாக 23-ந் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணா மேலணை திட்டத்திற்கு இதுவரை ரூ.13 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம். கிருஷ்ணா நதி நீர் விவகாரத்தில் 2-வது நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தேன்.
இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.