காவிரி விவகாரம் : கர்நாடகாவின் மண்டியாவில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம்
|காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து மண்டியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மண்டியா,
டெல்லியில் கடந்த 12-ந்தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. அப்போது, தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. இது கர்நாடக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும், கடந்த 18-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. அதனை ஏற்று கடந்த 19-ந்தேதியில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு அருகே அமைந்துள்ளது மண்டியா மாவட்டம். இங்கு காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து உள்ளூர் கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
அதன்படி மாவட்டத்தின் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் மாவட்டத்தின் தலைமை செயலகம் மூடப்பட்டது. மக்கள் பேரணியாக சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் மண்டியா மாவட்டத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.