காவிரி விவகாரம்: பெங்களூருவில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய விவசாயிகள்
|காவிரி விவகாரத்தில் பெங்களூரு நகரில் கர்நாடக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு,
காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18-ந்தேதி உத்தரவிட்டது.
தங்களிடம் போதிய நீர் இல்லாததால் இந்த உத்தரவை அமல்படுத்த கர்நாடகம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து மண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் வெடித்தது. கடந்த 23-ந் தேதி மண்டியாவில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடந்து வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.
இந்த முழு அடைப்புக்கு தமிழ் சங்கம் உள்பட 150-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், ஓலோ, ஊபர் டாக்சி சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்றும், வழக்கம்போல் இயங்கும் என்றும் கூறியுள்ளன. இது தவிர உணவக உரிமையாளர்கள் சங்கம் உள்பட சில சங்கங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளன. பெங்களூருவில் இன்று முழுஅடைப்பு அறிவிக்கப்பட்டபோதும், அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த சங்கங்கள் டவுன்ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளது. ஊர்வலத்தின் முடிவில் முதல்-மந்திரியை நேரில் சந்தித்து மனு கொடுக்கவும் திட்டமிட்டு உள்ளது.
முழு அடைப்பை முன்னிட்டு, வணிக நிறுவனங்கள், கடைகள், தனியார் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை மூடப்பட்டன. ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
முழு அடைப்பு போராட்டம் ஒருபுறம் நடைபெற்று வரும் சூழலில், பெங்களூருவில் உள்ள விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, போராட்டம் நடத்துவதற்கு சுதந்திர பூங்கா பகுதியில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், விவசாயிகளின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், பெங்களூருவில் மைசூர் வங்கி சர்க்கிள் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அவர்கள் கைது செய்யப்பட்டனர் என கூறியுள்ளனர்.