< Back
தேசிய செய்திகள்
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி: திருநங்கைகளை சாதி என வகைப்படுத்தியதால் சர்ச்சை
தேசிய செய்திகள்

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி: திருநங்கைகளை 'சாதி' என வகைப்படுத்தியதால் சர்ச்சை

தினத்தந்தி
|
8 April 2023 5:08 AM IST

மூன்றாம் பாலினத்தவரான ‘திருநங்கைகள்’, ஒரு சாதியாக வகைப்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாட்னா,

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி அரசு நடந்து வருகிறது. அங்கு கடந்த ஜனவரி 7-ந் தேதி, ரூ.500 கோடி செலவில், சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கியது. அதன் 2-ம் கட்ட கணக்கெடுப்பு பணி, இம்மாதம் 15-ந் தேதி தொடங்கி, மே 15-ந் தேதிவரை நடக்கிறது.

ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குறிப்பிட்ட எண் ஒதுக்கப்படுகிறது. சாதியின் உட்பிரிவுகள் கணக்கெடுக்கப்படுவது இல்லை. உதாரணமாக, பிராமண சாதியின் உட்பிரிவுகள் அனைத்தும் ஒரே எண் ஒதுக்கப்பட்டு, ஒரே சாதியாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இப்படி மொத்தம் 215 எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதே சமயத்தில், மூன்றாம் பாலினத்தவரான 'திருநங்கைகள்', ஒரு சாதியாக வகைப்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுக்கு 22 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மனித இனத்தின் ஒரு பாலினத்தை எப்படி சாதியாக கருதலாம்? என்று அவர்கள் கேள்வி விடுத்துள்ளனர். முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்