< Back
தேசிய செய்திகள்
அம்பேத்கர், நேரு ஆகியோர் சமூகத்தில் இருந்து அழிக்க நினைத்த சாதி உணர்வு இப்போது அதிகரித்துள்ளது: சசி தரூர்
தேசிய செய்திகள்

அம்பேத்கர், நேரு ஆகியோர் சமூகத்தில் இருந்து அழிக்க நினைத்த சாதி உணர்வு இப்போது அதிகரித்துள்ளது: சசி தரூர்

தினத்தந்தி
|
12 Nov 2022 6:39 PM IST

சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகமான “அம்பேத்கர்: எ லைப்”, வெளியிடப்பட்டது

மும்பை,

சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகமான "அம்பேத்கர்: எ லைப்", டாடா இலக்கிய விழாவில் வெளியிடப்பட்டது. இதனை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இயற்றியுள்ளார்.

புத்தக வெளியீட்டு விழாவில் சசி தரூர் பேசியதாவது:-

சுதந்திரத்திற்குப் பிந்தைய தசாப்தத்துடன் ஒப்பிடும்போது இந்திய சமூகத்தில் சாதி பற்றிய உணர்வு அதிகரித்துள்ளது. இத்தகைய சாதிய ரீதியிலான அடையாள முத்திரை, அரசியல் அணிதிரட்டலுக்கான அடையாளமாக மாறியுள்ளது.

பாகுபாடு அல்லது தீண்டாமைக்கு எதிரான அரசியல் கட்சிகள் கூட, சாதியின் பெயரால் வாக்குகளை தேடுகின்றன. சாதி அமைப்பு, அழிவை விட்டு வெகு தொலைவில் உள்ளது.

அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு இருவரும் இந்தியாவில் இருந்து சாதி அமைப்பு மறைந்து போக வேண்டும் என்று விரும்பினர். காலப்போக்கில் நவீனமயமாக்கலுடன் அது மறைந்துவிடும் என்று ஜவஹர்லால் நேரு நினைத்தார்.

அம்பேத்கர் சாதி ஒழிப்புக்காக போராடினார். சாதி அமைப்பு உணர்வு இருக்கும் வரை, ஒடுக்குமுறையும் இருக்கும் என்று நினைத்தார்.அம்பேத்கர் சாதி அமைப்பை முற்றிலுமாக அழிக்க விரும்பினார். ஆனால் இப்போது அரசியல் கட்சிகளில் சாதி அமைப்பு மேலும் மேலும் வேரூன்றியுள்ளதை அவர் அறிந்தால், அவர் அதிர்ச்சியடைவார்.

திருமண வரன் பார்க்கும் மேட்ரிமோனியல் பக்கங்களில் சாதி என்பது மிகவும் முக்கிய அம்சமாக உள்ளது. சாதி என்பது பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பழைய டை(கழுத்துப்பட்டை) போல தீங்கற்ற அடையாள முத்திரையாக மாறும் என்று நாம் நம்பலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்