அரிசிக்கு பதிலாக பணம் வழங்கும் பணி இன்று முதலே தொடங்கும்
|அரிசிக்கு பதிலாக பணம் வழங்கும் பணி இன்று (சனிக்கிழமை) முதலே தொடங்கும் என்று உணவு, பொதுவினியோகத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு:-
உணவு மற்றும் பொதுவினியோகத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கணக்கிட்டு வழங்கப்படும்
கர்நாடகத்தில் அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் தற்போது ஏழை மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 1-ந் தேதி (இன்று) முதல் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க திட்டமிட்டு இருந்தோம். அரிசி கிடைக்காததால், 5 கிலோ அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி குடும்பத்தில் ஒருவருக்கு கிலோ ரூ.34 விலையில் 5 கிலோ அரிசிக்கு ரூ.170 கிடைக்கும். 2 பேர், 3 பேர், 4 பேர் இருந்தால் அதற்கேற்ப தொகையை கூட்டி கணக்கிட்டு வழங்கப்படும்.
இந்த பணம் வழங்கும் திட்டத்தை திட்டமிட்டப்படி நாளை (இன்று) தொடங்கப்படும். வரும் நாட்களில் மக்களுக்கு ராகி, சோளம் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தெற்கு பகுதியில் ராகியும், வடக்கு பகுதியில் சோளமும் சாப்பிடுகிறார்கள். அதற்கு ராகி, சோளத்தை விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.
டெண்டருக்கு அழைப்பு
பயனாளிகளில் 99 சதவீதம் பேருக்கு வங்கி கணக்கு உள்ளது. அதுகுறித்த விவரங்கள் எங்களிடம் இருக்கிறது. நாங்கள் பணத்தை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணியை நாளை (இன்று) முதலே தொடங்குவோம். வங்கி கணக்கு இல்லாத பயனாளிகள் விரைவாக வங்கி கணக்குகளை தொடங்க வேண்டும். மற்றொரு புறம் அரிசி கொள்முதல் செய்வதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டுள்ளோம்.
தேர்தல் உத்தரவாத திட்டத்தை நிறைவேற்றும் வகையில் நாங்கள் திட்டமிட்டப்படி பணம் வழங்கும் திட்டத்தை தொடங்குகிறோம். மத்திய அரசு அரிசி வழங்கி இருந்தால் நாங்கள் மக்களுக்கு அரிசி வழங்கி இருப்போம். அரிசி பெற நாங்கள் கடந்த ஒரு மாதமாக மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. மத்திய அரசின் பிற நிறுவனங்களிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்ய முதலில் பொது டெண்டருக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அந்த டெண்டர் பணிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
என்னால் கூற முடியாது
முடிந்தவரை விரைவாக அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் எப்போது அரிசி வழங்கப்படும் என்பதை என்னால் கூற முடியாது. பணம் வழங்குவது என்பது தற்காலிக ஏற்பாடு ஆகும். இந்த திட்டத்திற்குரிய நிதி எங்களிடம் தயாராக உள்ளது. பயனாளர்களின் வங்கி கணக்கு விவரங்களும் உள்ளன. அதனால் நாளை (இன்று) முதலே அவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு கே.எச்.முனியப்பா கூறினார்.