ராஜஸ்தான் தலைமைச் செயலக கட்டிடத்தின் அடித்தளத்தில் இருந்து பணம், தங்கக்கட்டிகள் மீட்பு - போலீஸ் விசாரணை
|ராஜஸ்தான் மாநில தலைமை செயலகத்தின் அடித்தளத்தில் இருந்து ரூ.2.31 கோடி மற்றும் 1 கிலோ தங்கம் மீட்கப்பட்டது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநில தலைமை செயலகமான யோஜ்னா பவன் பல்வேறு தளங்களை கொண்டது. இந்த கட்டிடத்தின் அடித்தளத்திலும் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த தளத்தில் உள்ள ஒரு அலமாரியை ஆதார் துறை சார்ந்த ஊழியர்கள் திறந்தனர். பல மாதங்களாக பூட்டப்பட்டிருந்த இந்த அலமாரியை திறந்தபோது, அதில் டிராலி சூட்கேஸ் ஒன்று இருந்தது.
அதை திறந்த ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் கத்தை கத்தையாக ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் இருந்தன. அத்துடன் மின்னும் தங்கக்கட்டிகளும் பெருமளவில் இருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த பணம் மற்றும் தங்கக்கட்டிகளை கைப்பற்றினர்.
பின்னர் அந்த பணத்தை எண்ணி பார்த்தபோது, அதில் ரூ.2.31 கோடி இருந்தது. இதைப்போல தங்கக்கட்டிகளின் எடை 1 கிலோ இருந்தது. இது மாநில அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பணம் மற்றும் தங்கக்கட்டிகள் யாருடையது? என தெரியவில்லை.
எனவே இந்த தளத்தில் பணியாற்றி வரும் 7 ஊழியர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பணம் மற்றும் தங்கம் யாருடையது? எப்படி வந்தது? என விசாரணை நடத்தி வருவதாக ஜெய்ப்பூர் கமிஷனர் ஆனந்த் ஸ்ரீவத்சவா தெரிவித்தார். இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்த அவர், இந்த அலமாரி 2 அல்லது 3 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கலாம் என்றும் கூறினார்.
தலைமை செயலகத்தின் அடித்தளத்தில் இருந்து பெருமளவில் பணம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி அசோக் கெலாட்டும் செய்தியாளர்களிடம் விளக்கினார். இந்த நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியான பா.ஜனதா தீவிரமாக எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆளும் காங்கிரஸ் அரசை சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராஜேந்திர ரத்தோர் தனது டுவிட்டர் தளத்தில், 'முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆட்சி செய்யும் தலைமை செயலகத்தில் இருந்தே கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் தங்கம் மீட்கப்பட்டதன் மூலம், இந்த அரசு ஊழலில் திளைத்து வருவது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவ்வளவு அதிகமான பணமும், தங்கமும் யோஜ்னா பவனுக்கு எப்படி வந்தது? என்பதை முதல்-மந்திரி விளக்க வேண்டும்' என்று வலியுறுத்தி உள்ளார்.