அரிசிக்கு பதில் பணம் வழங்கும் திட்டம் தொடக்கம்
|அன்னபாக்ய திட்டத்தின் கீழ் அரிசிக்கு பதில் பணம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-மந்திரி சித்த ராமையா ஏழைகள் உணவு சாப்பிட்டால் மத்திய அரசுக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுகிறது என்று கூறி கடுமையாக தாக்கி பேசினார்.
பெங்களூரு:-
சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று, முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.
உத்தரவாத திட்டங்கள்
உத்தரவாத திட்டங்களில் முதலாவதாக அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் சக்தி திட்டம் கடந்த 11-ந் தேதி தொடங்கப்பட்டது. அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு மாதம் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது ரேஷன் கார்டில் எத்தனை குடும்ப உறுப்பினர்கள் உள்ளார்களோ அவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வீதம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதற்காக மாதந்தோறும் 2.29 லட்சம் டன் அரிசி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டது.
அன்னபாக்ய திட்டம்
ஆனால் இந்த திட்டத்திற்காக முதலில் அரிசி கொடுக்க ஒப்புக்கொண்ட மத்திய அரசு, மறுநாளே மறுத்துவிட்டது. இதனால் கர்நாடக அரசு ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, சத்தீஷ்கார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்ய முடிவு செய்தது. இதற்கிடையே திட்டமிட்டபடி அன்னபாக்ய திட்டத்தின் கீழ் அரிசி வழங்க வேண்டும் என்றும் பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. மேலும் கடும் விமர்சனங்களையும் முன்வைத்தன.
இந்த நிலையில் கர்நாடக அரசுக்கு ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களும் அரிசி வழங்கவில்லை. அதையடுத்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரிசி நிறுவனங்களிடம் இருந்து அரிசியை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால் மற்றொரு முடிவை கர்நாடக அரசு கொண்டு வந்தது.
அரிசிக்கு பதில் பணம்
அதாவது அன்னபாக்ய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசியுடன் மீதமுள்ள தலா 5 கிலோ அரிசிக்கு பதிலாக கிலோவுக்கு ரூ.34 என்ற வீதத்தில் ரேஷன் அட்டையில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தலா ரூ.170 பணம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மந்திரிசபையிலும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா அன்னபாக்ய திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு தாரர்களுக்கு 5 கிலோ கூடுதல் அரிசிக்கு பதில் பணம் வழங்கும் திட்டம் ஜூலை 10-ந் தேதி(நேற்று) தொடங்கப்படும் என்று கூறினார்.
சித்தராமையா தொடங்கி வைத்தார்
அதன்படி மாநில அரசின் உணவு-பொதுவிநியோகத்துறை சார்பில் அரிசிக்கு பணம் வழங்கும் திட்ட தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கோலார், மைசூரு மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு சித்தராமையா பணம் வழங்குவதை தொடங்கி வைத்தார். அதன் பிறகு இந்த விழாவில் சித்தராமையா பேசியதாவது:-
பிடிக்கவில்லை
அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கும் திட்டத்திற்கு அரிசி வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டோம். முதலில் ஒப்புக்கொண்டுவிட்டு பிறகு அரிசி வழங்க முடியாது என்று கூறிவிட்டனர். அரிசியை மின்னணு முறையில் ஏலம் விட மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் அந்த அரிசியை வாங்க யாரும் முன்வரவில்லை. இதை நாம் கீழ்த்தரமான அரசியல் என்று சொல்ல வேண்டுமா? வேண்டாமா?.
இது கன்னட மக்களுக்கு எதிரான விரோத அரசியல் என்று தான் சொல்ல வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் 1.28 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசிக்கான பணம் வழங்கப்படுகிறது. ஒரு கிலோ ரூ.34 விலையில் ஒருவருக்கு ரூ.170 வழங்கப்படும். 2 பேர் இருந்தால் ரூ.340 கிடைக்கும். ஏழைகள், நடுத்தர மக்கள் வயிறு நிறைய உணவு சாப்பிட்டால் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு பிடிக்கவில்லை.
உணவு தானியங்கள்
இந்த திட்டத்தால் மொத்தம் 4.42 கோடி பேர் பயன் அடைகிறார்கள். பணம் பெறும் ஏழைகள் உணவு தானியங்களை வாங்கி உண்டு நிம்மதியாக இருக்க வேண்டும். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் காரணமாக அன்ன பாக்ய திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு 5 கிலோ அரிசி வழங்குகிறது.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், உணவுத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா, போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டி, நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி சுரேஷ், சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் படிப்படியாக அனைத்து பயனாளிகளுக்கும் பணம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
வங்கி கணக்கு
பயனாளிகளில் சுமார் 85 சதவீதம் பேருக்கு வங்கி கணக்குகள் உள்ளன. மீதமுள்ள 15 சதவீதம் பேரை தொடர்பு கொண்டுள்ள அதிகாரிகள், விரைவாக வங்கி கணக்கை தொடங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். வங்கி கணக்கு தொடங்கிய பிறகு அவர்களுக்கும் பணம் கிடைக்கும். பிற மாநிலங்களில் இருந்து அரிசி கிடைக்கும் வரை இந்த பணம் வழங்கும் திட்டம் அமலில் இருக்கும். போதுமான அரிசி கிடைத்ததும், பயனாளிகளுக்கு பணத்திற்கு பதில் அரிசி வழங்கப்படும் என்று அரசு ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.