< Back
தேசிய செய்திகள்
இந்து வாலிபரை முஸ்லிம் மதத்திற்கு மாற்றிய விவகாரம்; உப்பள்ளியில் பதிவான வழக்கு பெங்களூருவுக்கு மாற்றம்
தேசிய செய்திகள்

இந்து வாலிபரை முஸ்லிம் மதத்திற்கு மாற்றிய விவகாரம்; உப்பள்ளியில் பதிவான வழக்கு பெங்களூருவுக்கு மாற்றம்

தினத்தந்தி
|
6 Oct 2022 2:42 AM IST

இந்து வாலிபரை முஸ்லிம் மதத்திற்கு மாற்றிய விவகாரம் தொடர்பாக உப்பள்ளியில் பதிவான வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெங்களூரு:

இந்து வாலிபரை முஸ்லிம் மதத்திற்கு மாற்றிய விவகாரம் தொடர்பாக உப்பள்ளியில் பதிவான வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்து வாலிபர் மதமாற்றம்

மண்டியா மாவட்டம் மத்தூரை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருக்கு ரகுமான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. அப்போது தனக்கு பணப்பிரச்சினை இருப்பது பற்றி ரகுமானிடம் ஸ்ரீதர் தெரிவித்து இருந்தார். அதன்பிறகு, பெங்களூரு பனசங்கரியில் உள்ள மசூதிக்கு ரகுமான் அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அஜிஷாப் என்பவரை ரகுமான் ஸ்ரீதருக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார். அதன்பிறகு, ஸ்ரீதரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு, ஒரு வாரமாக வீட்டுக்குள் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் ஸ்ரீதருக்கு இருக்கும் பணப்பிரச்சினையை தீர்ப்பதாக கூறி, அவரை இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு 12 பேர் சேர்ந்து மாற்றியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பற்றி தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு சென்று, அங்குள்ள ஏ.பி.எம்.சி. போலீசில் ஸ்ரீதா் புகார் அளித்திருந்தார். அதில், ரகுமான் உள்ளிட்டோர் தன்னை ஒரு வாரமாக அடைத்து வைத்திருந்ததுடன், இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறுவதற்காக 'சுன்னத்' செய்ததுடன், கட்டாயப்படுத்தி இறைச்சி சாப்பிட வைத்ததாக ஸ்ரீதர் கூறி இருந்தார்.

பெங்களூருவுக்கு வழக்கு மாற்றம்

அந்த புகாரின் பேரில் 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்த சம்பவம் நடந்த பகுதி பெங்களூரு என்பதால், இந்த வழக்கை உப்பள்ளியில் இருந்து பெங்களூருவுக்கு மாற்ற போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்தார்கள். அதன்படி, உப்பள்ளியில் பதிவான இந்த மதமாற்ற வழக்கு பெங்களூரு பனசங்கரி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் உப்பள்ளி போலீசார், பனசங்கரி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பேரில், போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மேலும் வழக்கு சம்பந்தமாக ரகுமான் மற்றும் சப்பீர் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவாகி விட்ட மற்ற 10 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறாா்கள். விரைவில் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்