ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட கோரிய வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு
|சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில், ஜெயலலிதா பொருட்களை ஏலம் விடுவது தொடர்பான வழக்கு நீதிபதி மோகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
பெங்களூரு,
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
பின்னர் இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ஆனால் இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் அவரது பெயர் தீர்ப்பில் இருந்து கைவிடப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக வசம் உள்ள ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
கர்நாடக வசம் உள்ள ஜெயலலிதாவின் பொருட்களை இன்று (6-ந்தேதி) தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி இங்குள்ள மாநில அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதற்கிடையே ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு, ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில், ஜெயலலிதா பொருட்களை ஏலம் விடுவது தொடர்பான வழக்கு நீதிபதி மோகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது குறித்து நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற ஏப்ரல் 6-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.