< Back
தேசிய செய்திகள்
ராமர் அசைவம் சாப்பிட்டதாக கூறிய தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
தேசிய செய்திகள்

ராமர் அசைவம் சாப்பிட்டதாக கூறிய தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
5 Jan 2024 10:35 PM IST

ராமரை முன்மாதிரியாக காண்பித்து அனைவரையும் சைவம் உண்பவர்களாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்று ஜிதேந்திர அவாத் கூறினார்.

மும்பை,

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும், மராட்டிய மாநில முன்னாள் மந்திரியுமான ஜிதேந்திர அவாத், சமீபத்தில் சீரடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, "கடவுள் ராமர் ஒரு பகுஜன் ஆவார். அவர் நமக்கு சொந்தமானவர். ராமர் சைவம் உண்பவர் அல்ல. அவர் அசைவம் உண்பவர். 14 ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் ஒருவர் சைவ உணவுகளை எங்கு தேடுவார்?

நமக்கு ராமரை முன்மாதிரியாக காண்பித்து அனைவரையும் சைவம் உண்பவர்களாக மாற்ற முயற்சிக்கின்றனர்" என்று கூறினார். அயோத்தி ராமர் கோவில் வரும் 22-ந் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், கடவுள் ராமர் குறித்து ஜிதேந்திர அவாத் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜிதேந்திர அவாத்தின் பேச்சுக்கு அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், வனவாசத்தின்போது ராமர் அசைவ உணவு உண்டதாக சாஸ்திரங்களில் எங்கும் எழுதப்படவில்லை என்றும், கடவுள் ராமர் எப்போதும் சைவ உணவு உண்பவர் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் ஜிதேந்திர அவாத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஸ்ரம்பாக் காவல்நிலையத்தில் புனே பா.ஜ.க. தலைவர் தீரஜ் காட்டே புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஜிதேந்திர அவாத் மீது மத உணர்வுகளை அவமதித்தல் தொடர்பாக 295(ஏ) என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்