நடிகர் பிரகாஷ் ராஜ் மீது போலீசில் புகார்
|சந்திரயான்-3 திட்டம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததால் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகராக இருப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சந்திரயான்-3 திட்டம் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார். அதாவது பிரேக்கிங் நியூஸ் என்று பதிவிட்டு வாவ்... விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து அனுப்பிய முதல் புகைப்படம் இது என்று குறிப்பிட்டு ஒருவர் டீ ஆற்றும் கார்ட்டூன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். இதைத்தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றொரு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில், வெறுப்பு வெறுப்பை தான் ஏற்படுத்தும். அந்த நகைச்சுவையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் அது உங்களை பற்றிய நகைச்சுவையாக மாறிவிடும். குழந்தை தனமாக செயல்படுவதை நிறுத்துங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சந்திரயான்-3 திட்டம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ் மீது கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் பனகட்டி போலீசில் இந்து அமைப்பின் தலைவர் நந்து கெய்க்வாட் உள்ளிட்டோர் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகார் மனுவில், சந்திரயான்-3 திட்டம் இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல். அனைவரும் இந்தியாவையும், நமது நாட்டு விஞ்ஞானிகளையும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த திட்டம் பற்றி விமர்சித்துள்ளதுடன், நமது பெருமைக்குரிய விஞ்ஞானிகள் குறித்தும் கிண்டல் செய்து கருத்து பதிவிட்டு தனது வக்கிரத்தை காட்டியுள்ளார். அவர் மனஅமைதியை இழந்துவிட்டார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.