< Back
தேசிய செய்திகள்
உ.பி:  கஞ்சா தொடர்பான சர்ச்சை பேச்சு - சமாஜ்வாதி எம்.பி. மீது வழக்குப்பதிவு
தேசிய செய்திகள்

உ.பி: கஞ்சா தொடர்பான சர்ச்சை பேச்சு - சமாஜ்வாதி எம்.பி. மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
29 Sept 2024 5:22 PM IST

கஞ்சாவை சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும் என்று அப்சல் அன்சாரி எம்.பி. கூறியுள்ளார்.

லக்னோ,

உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த காசிபூர் தொகுதி மக்களவை உறுப்பினரான அப்சல் அன்சாரி, கஞ்சாவை பலரும் வெளிப்படையாகப் பயன்படுத்துவதால் அதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும் எனப் பேசியிருந்தார்.

மேலும், மதம் சார்ந்த பண்டிகைகளில் 'கடவுளின் பிரசாதம்' மற்றும் 'புனித மூலிகை' என்ற பெயரில் கஞ்சா பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி கஞ்சா புகைப்பதால் பசி அதிகரிப்பதாகவும், உடல்நலன் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறிய அவர் இதனால் கஞ்சாவை சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். கும்பமேளாவில் அதிக அளவில் கஞ்சா பயன்படுத்தப்படுவதாகவும், சிவபெருமானுடன் தொடர்புடைய மற்றொரு போதைப் பொருளான 'பாங்கு' சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுவது போல கஞ்சாவையும் ஏன் அனுமதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கருத்துகளுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, எம்.பி. அப்சல் அன்சாரி மீது கோரா பசார் புறக்காவல் நிலைய பொறுப்பாளர் ராஜ்குமார் சுக்லா என்பவரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்சாரியின் பேச்சு சட்டரீதியாக மட்டுமின்றி மதரீதியாகவும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்