ஒடிசாவில் சிகிச்சைக்கு வந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக டாக்டர் மீது வழக்குப்பதிவு
|ஒடிசாவில் சிகிச்சைக்கு வந்த 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள இதய சிகிச்சைப் பிரிவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 பெண்கள் எக்கோ கார்டியோகிராம் சிகிச்சை மேற்கொள்வதற்காக வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த மருத்துவர், அந்த 2 பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த பெண்கள் நேற்று கட்டாக்கில் உள்ள மங்கலாபாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே புகார் அளித்த பெண்களின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட மருத்துவரை தாக்கியதாகவும், ஆனால் அது தொடர்பான புகார் எதுவும் தங்களுக்கு வரவில்லை எனவும் கட்டாக் கூடுதல் டி.சி.பி. அணில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.