லிங்காயத் சமூகத்தினர் குறித்து சர்ச்சை கருத்து: முதல்-மந்திரி சித்தராமையா மீதான அவதூறு வழக்கு ரத்து
|லிங்காயத் சமூகத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக முதல்- மந்திரி சித்தராமையா மீது பதியப்பட்ட அவதூறு வழக்கை சிறப்பு கோர்ட்டு ரத்து செய்துள்ளது.
பெங்களூரு:
லிங்காயத் சமூகத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக முதல்- மந்திரி சித்தராமையா மீது பதியப்பட்ட அவதூறு வழக்கை சிறப்பு கோர்ட்டு ரத்து செய்துள்ளது.
சட்டசபை தேர்தல்
கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த மே மாதம் 10-ந் தேதி நடைபெற்றது. இதற்கிடையே தேர்தல் பிரசார பணிகளில் அரசியல் கட்சியினர் பலரும் ஈடுபட்டனர். இந்த நிலையில் பிரசாரத்தின்போது அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அந்த சமயத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவரை முதல்-மந்திரியாக அமர வைப்பீர்களா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு, லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மை ஆட்சியில் தான் கமிஷன் மற்றும் ஊழல்கள் அதிகம் நடந்து இருந்தது. மேலும் மாநிலம் பாழானது என்றும் பதில் அளித்தார். அவரது இந்த கருத்துக்கு லிங்காயத் சமூகத்தினர் மற்றும் பா.ஜனதாவினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே லிங்காயத் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்த சித்தராமையா மீது சங்கர்ஷெட் மற்றும் மல்லய்யா ஆகியோர் அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.
சிறப்பு அமர்வு
இந்த வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு முதன்மை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். இதையடுத்து அவர் முதல்-மந்திரி சித்தராமையா மீது பதியப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த அமர்வில், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் மீது பதியப்பட்டு இருந்த குற்ற வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.