சிறுமியை திருமணம் செய்ததால் கிராம பஞ்சாயத்து துணை தலைவர் மீது வழக்கு
|சிறுமியை திருமணம் செய்ததால் கிராம பஞ்சாயத்து துணை தலைவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நஞ்சன்கூடு
கிராம பஞ்சாயத்து துணை தலைவர்
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா ஹரியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ்குமார். இவர் ஹத்யா கிராம பஞ்சாயத்து துணை தலைவராக உள்ளார். ஹரீஷ்குமாருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஹரீஷ்குமார், 17 வயது சிறுமியை திருமணம் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து குழந்தைகள் நலத்துைற அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதுகுறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஹரீஷ்குமார் திருமணம் செய்த பெண்ணின் வயது 18-ஐ தாண்டியதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
போக்சோவில் வழக்கு
இதுதொடர்பாக குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கிராம பஞ்சாயத்து துணை தலைவர் ஹரீஷ்குமார், சிறுமியின் வயதை மாற்றி போலியான ஆதார் கார்டு தயாரித்தது தெரியவந்தது.
மேலும் போலி ஆதார் கார்டு மூலம் சிறுமியின் வயதை மாற்றி அவர் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் நஞ்சன்கூடு போலீசில் ஹரீஷ்குமார் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் நஞ்சன்கூடு போலீசார் சிறுமியை திருமணம் செய்ததால் ஹரீஷ்குமார் மீது போக்சோ, 376 (2) என் (மீண்டும், மீண்டும் பலாத்காரம் செய்தல்), துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.