< Back
தேசிய செய்திகள்
அர்ச்சகர் நியமனத்துக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் - ஐகோர்ட்டுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

அர்ச்சகர் நியமனத்துக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் - ஐகோர்ட்டுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
24 Aug 2023 4:38 AM IST

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட்டு விரைந்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோவில் நிர்வாக அதிகாரி கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார்.

இதை எதிர்த்து அதே கோவிலில் பணிபுரிந்த சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், சுகவனேஸ்வர் கோவில் ஆகமத்தின் அடிப்படை ஆனது, இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதிகள், ஆகமத்தின் அடிப்படை இல்லை என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், 'குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களையே அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் எனவும் இதில் சாதிக்கு எந்த பங்கும் இல்லை என்றும் தீர்ப்பு அளித்திருந்தார்.

மேல்முறையீடு

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்பிரமணிய குருக்கள் சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஆகம கோவில்களில் அர்ச்சகர்களை பரம்பரையாகதான் நியமிக்க வேண்டும் என்றும், தனிநீதிபதியின் உத்தரவு சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிரானது என்றும் வாதிட்டார். எனவே இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அப்போது அரசு தலைமை வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் மறுத்துவிட்டனர்.

தடைகோரி மேல்முறையீடு

இதற்கிடையே தனி நீதிபதியின் தீர்ப்புக்கும், கோவில் நிர்வாக அதிகாரி கடந்த 2018-ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்புக்கும் இடைக்கால தடை கோரி முத்து சுப்பிரமணிய குருக்கள் சார்பில் வக்கீல் ஜி.பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது.

அப்போது மனுதாரர் முத்து சுப்பிரமணிய குருக்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் குரு கிருஷ்ண குமார், பி.வள்ளியப்பன் ஆஜராகி வாதிட்டனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் டி.குமணனுடன் ஆஜரான மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா ஆகியோா வாதிட்டனர்.

விரைந்து விசாரிக்க உத்தரவு

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 'சேலம் சுகவனேஸ்வரர் கோவில் தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளித்ததுடன், கோவிலுக்கான அர்ச்சகர் நியமனம் கூடாது என்றும் தெளிவுப்படுத்தினர்.

சேலம் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிரான மனுவை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும் என சென்னை ஐகோர்ட்டை கேட்டுக்கொள்கிறோம். வழக்கு தொடர்பான கூறுகளை விசாரிக்கவில்லை என்பது தொடர்பான வாதங்களை ஐகோர்ட்டில் முன் வைக்கலாம். இதன்படி இந்த மேல்முறையீடு மனு முடித்து வைக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்