< Back
தேசிய செய்திகள்
சுள்ளியா அருகே, கார்- வேன் மோதல்;  பெங்களூரு நிமான்ஸ் ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம்
தேசிய செய்திகள்

சுள்ளியா அருகே, கார்- வேன் மோதல்; பெங்களூரு நிமான்ஸ் ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
28 Aug 2022 8:46 PM IST

சுள்ளியா அருகே, கார் மற்றும் வேன் மோதிய விபத்தில் பெங்களூரு நிமான்ஸ் ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மங்களூரு;

நேருக்கு நேர் மோதல்

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா அருகே உள்ள சுப்ரமணியா-கடபா தேசிய ெநடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் எதிரே ஆம்னி வேன் வந்தது. இந்த நிலையில் திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர், எதிரே வந்த ஆம்னி வேன் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. அதில் இரண்டு வாகனங்களும் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் கார் மற்றும் ஆம்னி வேனின் ஈடுபாடுகளில் சிக்கி 10 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதைபாா்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் சிலர் விரைந்து வந்து இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். பின்னா், ஆம்புலன்ஸ் மூலம் கடபா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூருவை சேர்ந்தவர்

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக கடபா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் வந்த 4 பேர் பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் ஊழியர்களாக வேலை செய்து வருபவா்கள் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதேஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு பெங்களூருவிற்கு திரும்பி சென்ற போது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதில் காரை ஓட்டியவர் நந்தகுமார் என்பது தெரியவந்தது. இவர்களுடன் வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் கூறினர்.

தர்மஸ்தலா சென்ற போது...

மேலும் ஆம்னி வேனில் வந்த 5 பேர் சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் சிவமொக்காவில் இருந்து தர்மஸ்தலாவிற்கு செல்லும் போது விபத்தில் சிக்கியதும், விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சுப்ரமணியா-கடபா செல்லும் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்