< Back
தேசிய செய்திகள்
மூடிகெரே அருகே கார் கவிழ்ந்து விபத்து; பெங்களூருவை சேர்ந்த தந்தை-மகன் சாவு
தேசிய செய்திகள்

மூடிகெரே அருகே கார் கவிழ்ந்து விபத்து; பெங்களூருவை சேர்ந்த தந்தை-மகன் சாவு

தினத்தந்தி
|
20 Jun 2022 9:05 PM IST

மூடிகெரே அருகே கார் கவிழ்ந்த விபத்தில் பெங்களூருவை சேர்ந்த தந்தை-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். தர்மஸ்தலா கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

சிக்கமகளூரு;

கார் கவிழ்ந்தது

பெங்களூரு ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மராஜூ (வயது 58). இவரது மனைவி பாரதி. இந்த தம்பதிக்கு கிரண் குமார் (23) என்ற மகன் இருந்தார். இந்த நிலையில் நரசிம்மராஜூ குடும்பத்தினருடன் தனது காரில் தட்சிண கன்னடாவில் உள்ள தர்மஸ்தலா கோவிலுக்கு சென்றார். பின்னர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு பெங்களூரு நோக்கி காரில் சென்றனர். காரை, நரசிம்மராஜூ ஓட்டியதாக கூறப்படுகிறது.

மூடிகெரே அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நரசிம்மராஜூவின் கட்டுப்பாட்டை இழந்து கார் தறிகெட்டு ஓடியது. பின்னர் சாலையோரத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தந்தை-மகன் சாவு

இந்த விபத்தில் காருக்குள் இருந்த கிரண் குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நரசிம்மராஜூவும், அவரது மனைவி பாரதியும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

அவர்களை, அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நரசிம்மராஜூ பரிதாபமாக உயிரிழந்தார்.

பாரதி மேல்சிகிச்சைக்காக பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மூடிகெரே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் விபத்தில் உயிரிழந்த கிரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மூடிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்