பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: பெண் உள்பட 3 பேர் சாவு
|இரியூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். திருப்பதி சென்றுவிட்டு திரும்பியபோது இந்த சோகம் நடந்துள்ளது.
சிக்கமகளூரு;
3 பேர் சாவு
சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா ஒட்டனஹள்ளி கிராமம் அருகே பெங்களூரு- சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பு சுவரை உடைத்து கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் இடிபாடுகளிடையே சிக்கி பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மராட்டியத்தை சேர்ந்தவர்கள்
இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் இரியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த ராஜூ, சேகர், கங்கா பாய் என்பது தெரியவந்தது. படுகாயம் அடைந்தவர்களின் பெயர் விவரம் தெரியவில்லை.
இறந்தவர்கள் உள்பட 6 பேரும் திருப்பதிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது.இதுகுறித்த இரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.