கார்-லாரி மோதல்; ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, மனைவியுடன் சாவு
|சித்ரதுர்கா அருகே கார்-லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, அவரது மனைவி பலியானார்கள்.
சிக்கமகளூரு;
கார்-லாரி மோதல்
பெங்களூருவை சேர்ந்தவர் ஜெயராம்நாயக் (வயது 72). இவர், ஓய்வு பெற்ற கலால்துறை அதிகாரி ஆவார். இவரது மனைவி லதா (64). இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ஜெயராம் நாயக், தனது மனைவி லதாவுடன் காரில் தாவணகெரேவுக்கு சொந்த வேலை காரணமாக சென்று கொண்டிருந்தார்.
சித்ரதுா்கா அருகே களால் என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஜெயராமின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. பின்னர் கார், முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.
தம்பதி சாவு
இதில் காரின் இடுபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்த ஜெயராம்நாயக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி லதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் பரமசாகரா போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஜெயராம் நாயக் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பரமசாகரா போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.