< Back
தேசிய செய்திகள்
பெண்ணை மிரட்டி ரூ.60 லட்சம் நகை, பணத்தை பறித்த கார் டிரைவர் கைது
தேசிய செய்திகள்

பெண்ணை மிரட்டி ரூ.60 லட்சம் நகை, பணத்தை பறித்த கார் டிரைவர் கைது

தினத்தந்தி
|
3 Aug 2023 3:12 AM IST

பெங்களூருவில் பெண்ணை மிரட்டி ரூ.60 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தை பறித்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். நண்பர் போல் நடித்து அவர் கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.

ராமமூர்த்திநகர்:-

கார் டிரைவர் கைது

பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவரது சொந்த விவகாரங்கள் குறித்து கணவரிடம் சொல்லி விடுவதாக கூறி மிரட்டி ஒரு கார் டிரைவர் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், பணத்தை பறித்து இருந்தார். அவர், மீண்டும் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் நடந்த சம்பவங்கள் குறித்து ராமமூர்த்திநகர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை தேடிவந்தனர். இந்த நிலையில், பெண்ணை மிரட்டி நகை, பணத்தை பறித்ததாக எசருகட்டா அருகே பூதய்யா லே-அவுட்டை சேர்ந்த கிரண்குமார்(வயது 35) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனிப்பட்ட விஷயங்கள் பேச்சு

அதாவது வாடகை கார் டிரைவரான கிரண்குமாரின் காரில் கடந்த ஆண்டு(2022) நவம்பர் மாதம் முதல் முறையாக அந்த பெண் பயணம் செய்திருந்தார். இந்திராநகரில் இருந்து பானசவாடி அருகே உள்ள ஓ.எம்.பி.ஆர். லே-அவுட்டுக்கு அந்த பெண் சென்றிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் தன்னுடைய நண்பருடன் செல்போனில் பேசியபடி பெண் சென்றுள்ளார். அப்போது தன்னுடைய சொந்த விவகாரங்கள் மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நண்பரிடம் அந்த பெண் பேசியுள்ளார்.

இதனை உன்னிப்பாக கவனித்து கிரண்குமாரும் அறிந்து கொண்டார். அதன்பிறகு, 2 முறை, கிரண்குமாரின் வாடகை காரில் அந்த பெண் பயணம் செய்துள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணின் செல்போன் எண்ணை கிரண்குமார் கேட்டு அறிந்து கொண்டார். அதன்பிறகு, மற்றொரு செல்போன் எண்ணில் இருந்து பெண்ணிடம் கிரண்குமார் பேசி இருக்கிறார். அதாவது அந்த பெண்ணுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவர் என்று கூறி கிரண்குமார் பேச தொடங்கி உள்ளார்.

நண்பர் எனக்கூறி....

அந்த சந்தர்ப்பத்திலும் பள்ளி நண்பர் என நினைத்து கிரண்குமாரிடம் தன்னை பற்றி பெண் தெரிவித்துள்ளார். தனக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்தும் அவர் கூறி இருக்கிறார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கிரண்குமார், பெண்ணின் பிரச்சினையை சரி செய்வதாக கூறிவிட்டு, தனக்கு பணப்பிரச்சினை இருப்பதாக சொல்லி முதலில் ரூ.10 லட்சத்தை வாங்கி உள்ளார். அதன்பிறகு, மேலும் ரூ.10 லட்சத்தை கிரண்குமார் வாங்கினார்.அத்துடன் நிற்காமல் மேலும் தனக்கு பணம் கொடுக்கும்படி பெண்ணிடம் கிரண்குமார் கேட்டுள்ளார். அப்போது கிரண்குமார் தனது நண்பர் இல்லை, வாடகை கார் டிரைவர் தான் என்பதை அந்த பெண் உறுதி செய்துள்ளார். இதையடுத்து, கிரண்குமாருடன் பேசுவதை அவர் நிறுத்தி விட்டார். ஆனாலும் கிரண்குமார் விடாமல் தனக்கு பணம் கொடுக்க வேண்டும், இல்லையெனில் நண்பர்களுடன் பேசி, பழகியது, பிற ரகசிய விஷயங்கள், சொந்த விஷயங்கள் குறித்து கணவரிடம் சொல்லி விடுவேன் எனக்கூறி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.

ரூ.60 லட்சம் நகைகள் மீட்பு

அத்துடன் சமூக வலைதளங்களிலும், அந்த பெண்ணின் ரகசியங்களை வெளியிட்டு அவமானப்படுத்தி விடுவதாக கிரண்குமார் மிரட்டியதுடன், தங்க நகைகளை கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதையடுத்து, தனது வீட்டில் திருமணத்தின் போது கொடுத்த 750 கிராம் தங்க நகைளை கிரண்குமாரிடம் அந்த பெண் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் கிரண்குமார் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதால், அதுபற்றி ராமமூர்த்திநகர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகாரும் அளித்துள்ளார்.

அதன்பேரில், கிரண்குமாரை போலீசார் கைது செய்து, பெண்ணை மிரட்டி வாங்கிய பணத்தின் மூலம் வாங்கிய நகைகள், அந்த பெண்ணின் நகைகள் என ஒட்டு மொத்தமாக 960 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான கிரண்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வாகனங்களில் பயணிக்கும் பெண்களே உஷார்

இதுகுறித்து கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத் கூறுகையில், 'வாடகை காரில் பயணித்த பெண் தனது சொந்த விவகாரங்கள் குறித்து பேசியதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட டிரைவர், அதனை வெளியே சொல்வதாகவும், இணையதளங்களில் வெளியிடுவதாகவும் கூறி மிரட்டி நகை, பணத்தை பறித்திருக்கிறார். எனவே வாடகை கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் தனியாக பயணிக்கும் பெண்கள் செல்போனில் தங்களது சொந்த விவகாரங்கள், தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசும் போது கவனமாகவும், உஷாராகவும் இருக்க வேண்டும்', என்றார்.

மேலும் செய்திகள்