< Back
தேசிய செய்திகள்
நாய்க்கு உணவு அளித்த இளம்பெண் மீது கார் மோதல்; முன்னாள் ராணுவ அதிகாரி கைது, ஜாமீனில் விடுவிப்பு
தேசிய செய்திகள்

நாய்க்கு உணவு அளித்த இளம்பெண் மீது கார் மோதல்; முன்னாள் ராணுவ அதிகாரி கைது, ஜாமீனில் விடுவிப்பு

தினத்தந்தி
|
17 Jan 2023 2:18 PM IST

சண்டிகரில் வீடு அருகே தெருவில் நாய்க்கு உணவு அளித்த இளம்பெண் மீது கார் மோதிய வழக்கில் முன்னாள் ராணுவ உயரதிகாரி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலையானார்.



சண்டிகர்,


சண்டிகரில் வசித்து வரும் இளம்பெண் தேஜஸ்விதா (வயது 25). கட்டிடக்கலையில் பட்டப்படிப்பு படித்துள்ள இவர், ஆட்சி பணிக்கான நுழைவு தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.

இவர் தனது தாயார் மன்ஜீத் கவுருடன் தினமும் தனது வீடு அருகே தெருவில் நாய்களுக்கு உணவு அளிப்பது வழக்கம். இந்நிலையில், அதுபோன்று உணவு அளித்து கொண்டிருந்தபோது, இரவு 11 மணியளவில், விரைவாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதில், பலத்த காயமடைந்த அவர் தெருவில் விழுந்து கிடந்து உள்ளார். இதனை பார்த்து, அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் கவுர், உதவி கேட்டு கூச்சலிட்டு உள்ளார். ஆனால், அவருக்கு உதவ யாரும் முனவரவில்லை.

இதனை தொடர்ந்து, வீட்டுக்கு மொபைல் போன் வழியே அழைத்து, விசயம் பற்றி தெரிவித்து விட்டு, போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உள்ளார். இதன்பின், கவுரின் மகளை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

சிகிச்சைக்கு பின் தேஜஸ்விதா தேறி வருகிறார். கார் மோதிய அதிர்ச்சி தரும் வீடியோவை டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். சண்டிகர் டி.ஜி.பி.யை டேக் செய்து பதிவிட்ட அந்த செய்தியில், தவறான வழியில் விரைவாக வந்த வாகனம், நல்ல செயலில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒரு சிறுமி மீது மோதி விட்டு சென்றுள்ளது.

அவருக்காக நான் இறைவனை வேண்டி கொள்கிறேன். கார் ஓட்டுனர் குடித்து விட்டு வாகனம் ஓட்டி சென்றுள்ளாரா? என அவர் கேள்வியும் கேட்டுள்ளார். இந்த விசயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு அவர் கோரிக்கையும் விடுத்து உள்ளார்.

இந்த வழக்கில் முதலில் தேஜஸ்விதா சார்பில் போலீசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. போட்டி தேர்வுக்கு தயாராகி வந்த அவர், அதில் விருப்பமும் காட்டவில்லை. ஆனால், விபத்து பற்றி ஊடகங்களில் செய்தி வெளிவந்த பின்பு, சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டது. பலரும் கண்டனங்களை வெளியிட்டனர்.

இதனை தொடர்ந்தே, போலீசார் அவரை சமரசப்படுத்தி புகார் அளிக்க செய்தனர். இதன்பின், போலீசாரின் விசாரணையில் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் மொகாலி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் சந்தீப் சாஹி என்பது தெரிய வந்தது.

அவரை போலீசார் கைது செய்தனர். எனினும், அவர் பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டார். டெல்லியில் சமீபத்தில் 20 வயது அஞ்சலி என்ற பெண் பணி முடிந்து, இரவில் வீடு திரும்பும்போது, 5 இளைஞர்கள் சென்ற கார் மோதி 13 கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் தெரிய வந்தது.

அதன்பின்பு டெல்லியை ஒட்டிய பகுதியில் உணவு பொருள் வினியோக ஏஜெண்ட் ஒருவர் புது வருட தினத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, அவர் மீது மோதிய வாகனத்தில் சிக்கி ஒன்றரை கி.மீ. இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் நடந்தது. டெல்லி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது கடும் கண்டனங்களை எதிர் கொண்டது.



மேலும் செய்திகள்