< Back
தேசிய செய்திகள்
போலீஸ் ஜீப் மீது கார் மோதல்
தேசிய செய்திகள்

போலீஸ் ஜீப் மீது கார் மோதல்

தினத்தந்தி
|
4 July 2023 3:05 AM IST

தேவனஹள்ளி அருகே, குடிபோதையில் ‘ஜாலி ரைடு’ சென்றவர்களின் கார், போலீஸ் ஜீப் மீது மோதியது. இதில் போலீஸ்காரர், ‘ஜாலி ரைடு’ சென்ற ஒருவரும் பலியானார்கள்.

சிக்கஜாலா:-

போலீஸ்காரர் ரோந்து

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் சுரேஷ் (வயது 40). இவர், தேவனஹள்ளியிலேயே வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு தேவனஹள்ளி இன்ஸ்பெக்டர் தர்மேகவுடாவுடன் போலீஸ்காரர் சுரேஷ் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். போலீஸ் ஜீப்பை சுரேஷ் ஓட்டினார். சிக்கஜாலா அருகே தொட்டஜாலா மேம்பாலத்தில் ஜீப் சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த மேம்பாலத்தில் ஒரு கார் நிறுத்தப்பட்டு இருந்தது. உடனே ஜீப்பை நிறுத்தும்படி கூறிய இன்ஸ்பெக்டர் தர்மேகவுடா, போலீஸ்காரர் சுரேசை சென்று டிரைவரிடம் விசாரித்துவிட்டு வரும்படி தெரிவித்தார். அதன்படி, அவரும் சென்று விசாரித்தார். அப்போது அது வாடகை கார் என்பதும், விபத்தில் சிக்கியதால் பயணிகளை அனுப்பி விட்டு டிரைவர் மட்டும் மெக்கானிக்குக்காக காத்து நின்றதும் தெரியவந்தது.

போலீஸ்காரர் சாவு

உடனே சுரேஷ் அங்கிருந்து திரும்பி வந்து ஜீப்பில் இருந்த இன்ஸ்பெக்டரிடம் தகவல் தெரிவித்துவிட்டு, அங்கிருந்து ஜீப்பை ஓட்டி செல்ல தயாரானார். அந்த சந்தர்ப்பத்தில் இன்ஸ்பெக்டர் தர்மேகவுடாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனால் அவர் செல்போனில் பேசியபடி ஜீப்பில் இருந்து இறங்கி சென்று விட்டார். இந்த நிலையில், அதே மேம்பாலத்தில் வந்த ஒரு கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் ஜீப் மீது மோதியது. இதில், ஜீப் மற்றும் காரின் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது.

இதனால் ஜீப்பில் இருந்த போலீஸ்காரர் சுரேஷ், காரில் இருந்த 3 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். உடனடியாக அங்கிருந்தவர்கள் 7 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி போலீஸ்காரர் சுரேஷ், காரில் இருந்த சரத் (28) ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர். மற்ற 5 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடிபோதையில் காரை...

போலீஸ் விசாரணையில், சரத் தனது நண்பர்களான சந்திர பிரகாஷ், இமானுவேல், பிரியதர்ஷனி, கேஜியா, ஷெரீன் ஆகிய 5 பேருடன் சேர்ந்து மது குடித்துவிட்டு காரில் ஜாலி ரைடு சென்றுள்ளார். அந்த காரை சந்திர பிரகாஷ் குடிபோதையில் ஓட்டியதும், அவரது கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் ஜீப் மீது மோதியதால் போலீஸ்காரர் சுரேசும் பலியானது தெரியவந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் இன்ஸ்பெக்டர் தர்மேகவுடா ஜீப்பில் இருந்து கீழே இறங்கி சென்றதால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து சிக்கஜாலா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்