இ்டுக்கியில் தீப்பிடித்து எரிந்த கார் - அய்யப்ப பக்தர்கள் 5 பேர் உயிர் தப்பினர்
|இந்த விபத்தில் கார் முழுவதும் எரிந்து எலும்பு கூடுபோல் ஆனது.
மூணாறு,
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சோ்ந்த 5 பேர் ஒரு காரில் சபரிமலைக்கு புறப்பட்டனர். கேரள மாநிலம் இ்டுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் வழியாக நேற்று அதிகாலை 4 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர். வண்டிப்பெரியார் 62-ம் மைல் பகுதியில் வந்தபோது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. இதை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதில் தீ மளமளவென எரிந்ததால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் காரில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
இந்த விபத்தில் கார் முழுவதும் எரிந்து எலும்பு கூடுபோல் ஆனது. காரில் இருந்து புகை கிளம்பியதும் கீழே இறங்கியதால் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து வண்டிப்பெரியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.