< Back
தேசிய செய்திகள்
பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சு ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது; முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி
தேசிய செய்திகள்

பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சு ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது; முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி

தினத்தந்தி
|
10 Sept 2023 3:45 AM IST

பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களிடம் எதிர்ப்பு அலை

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைக்க தேவேகவுடா சம்மதம் தெரிவித்து இருப்பதாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறி இருக்கிறார். மாநிலத்தில் காங்கிரசுக்கு எதிராக செயல்பட கூட்டணி குறித்து அவர் பேசி இருக்கிறார். மாநிலத்தை கொள்ளையடித்து வருபவர்களுக்கு கடிவாளம் போட வேண்டும். கடந்த 2006-ம் ஆண்டிலேயே பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருந்தேன். காங்கிரஸ் ஆட்சி அமைந்த 3 மாதத்திலேயே, அரசுக்கு எதிராக மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். முன்பெல்லாம் ஒரு ஆட்சி 4 ஆண்டுகள் நிறைவு செய்யும் போது தான் மக்களிடையே எதிர்ப்பு அலை உருவாகும். தற்போது காங்கிரஸ் அரசு அமைந்த 3 மாதத்திலேயே மக்களிடம் எதிர்ப்பு அலை ஏற்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டத்தில் உள்ளது

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. தொகுதி பங்கீடு உள்ளிட்டவை எதுவும் உறுதி செய்யப்படவில்லை. கூட்டணி குறித்து நாளை (அதாவது இன்று) ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தொண்டர்களுடன் தேவேகவுடா ஆலோசனை நடத்த உள்ளார். தொண்டர்களின் கருத்துகளை கேட்பது முக்கியம்.

கூட்டணி விவகாரத்தில் கொள்கைகள் பற்றியெல்லாம் சிலர் பேசுகிறார்கள். அதுபற்றி பின்னர் பேசுகிறேன். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் பல மாதங்கள் உள்ளது. கூட்டணி விவகாரத்தில் இன்னும் நிறைய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற வேண்டி உள்ளது. கூட்டணி விவகாரத்தில் நம்பிக்கை, விஸ்வாசம் மிக முக்கியமானதாகும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்