'ரஷியாவிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவை குறை சொல்ல முடியாது' - ஜெர்மனி தூதர் கருத்து
|குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தால், அதை வாங்கியதற்காக இந்தியாவை குறை சொல்ல முடியாது என ஜெர்மனி தூதர் தெரிவித்தார்.
புதுடெல்லி,
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில், ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் நடவடிக்கையை மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் ரஷியாவிடம் இருந்து 1.4 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.
ரஷியாவின் மாதாந்திர எண்ணெய் விற்பனையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் உள்ளன. எந்த நாட்டிடம் இருந்து நல்ல ஒப்பந்தம் கிடைக்கிறதோ, அங்கிருந்தே எண்ணெய் வாங்குவது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் கூறியதாவது:-
"ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது, எங்கள் வர்த்தகம் அல்ல என்பதை நான் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளேன். அது இந்திய அரசு முடிவு செய்யும் விஷயம். மிகக் குறைந்த விலையில் கிடைத்தால், அதை வாங்கியதற்காக இந்தியாவை நான் குறை சொல்ல முடியாது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.