அசாம் சட்டசபையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான 2 மணி நேர இடைவேளை ரத்து - முதல்-மந்திரி விளக்கம்
|சட்டசபையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான 2 மணி நேர இடைவேளை ரத்து செய்யப்பட்டது குறித்து ஹிமாந்தா பிஸ்வா சர்மா விளக்கமளித்துள்ளது.
திஸ்பூர்,
கடந்த 1937-ம் ஆண்டு அசாமில் காலணித்துவ ஆட்சிக்காலத்தின்போது, முஸ்லிம் லீக் அரசாங்கத்தின்கீழ் மாநில சட்டசபையில் வெள்ளிக்கிழமை (ஜும்ஆ) தொழுகைக்காக 2 மணி நேரம் இடைவேளை விடும் வழக்கம் கொண்டு வரப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த இந்த வழக்கமானது தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி அசாம் சட்டசபையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான 2 மணி நேர இடைவேளை ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் பிஸ்வஜித் அறிவித்தார். வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் இடைவேளை விடப்படுவதால், முக்கிய விவாதங்களை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், அதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தொழுகைக்கான இடைவேளை நேரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அசாம் மாநில அரசின் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்கள் தொடர்பாக அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
"அசாம் சட்டசபையில் உள்ள இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக அமர்ந்து 2 மணி நேர இடைவேளையை ரத்து செய்வது என ஒருமனதாக தீர்மானித்தோம். அந்த இடைவேளை நேரத்தில் நாம் இன்னும் உழைக்க வேண்டும். 1937-ல் தொடங்கிய இந்த நடைமுறை நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒருமித்த முடிவு. இது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.