தந்தையை அறியாத குழந்தைகளின் சான்றிதழ்களில் தாயாரின் பெயர் மட்டும் போதும்; மகாபாரத கர்ணனை மேற்கோள் காட்டி கேரள ஐகோர்ட்டு உத்தரவு!
|திருமணம் ஆகாத பெண்ணுக்கு பிறந்த குழந்தைகளுக்கு எந்த ஒரு உரிமையும் மறுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்று கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
கொச்சி,
திருமணம் ஆகாத பெண்ணுக்கு பிறந்த குழந்தைகளும் நம் நாட்டின் குடிமக்கள் தான், அந்த குழந்தைகளுக்கு எந்த ஒரு உரிமையும் மறுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்று கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
நீதிபதி பிவி குனிகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில், பாலியல் பலாத்காரம் மூலம் கர்ப்பமான பெண்கள் மற்றும் திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்கள், அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு அரசியலமைப்புச் சட்டப்படி அனைத்து உரிமைகளும் உண்டு. மேலும் அந்த குழந்தை தன்னுடைய தாயாரின் பெயரை பிறப்புச் சான்றிதழில் சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில், மகாபாரதத்தில் வரும் கர்ணன் தன்னுடைய பெற்றோர் யார் என தெரியாமல் தவித்தான். அதேபோன்ற நிலைமை இவர்களுக்கும் வரக்கூடாது. மகாபாரதத்தில் கர்ணன் ஒரு உண்மையான வீரனாக திகழ்ந்தான்.இந்த புதுயுக கர்ணன்கள் சராசரி குடிமக்களைப் போல வாழத்தகுதி உண்டு.
முன்னதாக இந்த வழக்கை தொடுத்த மனுதாரரின் தாயார் திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்றுக் கொண்டு சிங்கிள் பேரண்ட் என்று அழைக்கப்படும் ஒற்றை பெற்றோராக வாழ்பவர்.
இந்நிலையில், மனுதாரர் தன்னுடைய சான்றிதழ்களில் தகப்பனார் பெயர் வெவ்வேறு சான்றிதழ்களில் வெவ்வேறு விதமாக உள்ளது என்று கூறியிருந்தார். அதை கேட்ட நீதிபதி, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களில் மனுதாரரின் தந்தையின் பெயரை நீக்கிவிட்டு தாயாரின் பெயரை மட்டும் சேர்த்து சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் கோர்ட்டு உத்தரவில், கல்வித்துறை, ஆதார், வருமானவரித்துறை, பாஸ்போர்ட் அலுவலகம், தேர்தல் ஆணையம் என அனைத்து அரசு நிறுவனங்களும் மனுதாரரின் தந்தை பெயரை நீக்கிவிட்டு தாயாரின் பெயரை அதில் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.