ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்குமா? மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
|ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கக் கோரி தாக்கலான வழக்குகள் ஒரே வழக்காக இணைத்து விசாரிக்கப்பட உள்ளன.
புதுடெல்லி,
ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கக் கோரி தாக்கலான வழக்குகள் ஒரே வழக்காக இணைத்து விசாரிக்கப்பட உள்ளன. இதில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
நமது நாட்டில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள்- அதாவது ஆண் மற்றொரு ஆணையும், பெண் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்கிறபோது அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை.
ஆனால் ஐதராபாத்தைச் சேர்ந்த சுப்ரியோ சக்கரவர்த்தி- அபய் தங், டெல்லியைச் சேர்ந்த பார்த் பெரோஸ் மெஹரோத்ரா- உதய்ராஜ் ஆனந்த் ஆகிய ஆண் ஜோடிகள், தங்கள் திருமணத்துக்கு 1954-ம் ஆண்டு இயற்றப்பட்ட சிறப்பு திருமணச்சட்டத்தின்படி சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடுத்து அவை நிலுவையில் உள்ளன.
இதே போன்ற வழக்குகள் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளிலும் நிலுவையில் இருக்கின்றன.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி. பார்திலாலா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். அவர், "தற்போது இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு முன் 2 தெரிவுகள் உள்ளன. டெல்லி ஐகோர்ட்டில் இதையொட்டிய ஒரு வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்கு வர உள்ளதால் அதன் தீர்ப்புக்காக சுப்ரீம் கோர்ட்டு காத்திருக்கலாம் அல்லது இதையொட்டிய எல்லா வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கே மாற்றி விடலாம்" என தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளின் சார்பில் ஆஜரான வக்கீல்கள், " எல்லா வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கே மாற்ற வேண்டும். அப்போது இந்த விவகாரததில் ஒரு அதிகாரப்பூர்வமான உத்தரவு வரும். மத்திய அரசும் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தனது பதில் மனுவை தாக்கல் செய்ய முடியும்" என குறிப்பிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு, ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்டு பல்வேறு மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளில் தொடுக்கப்பட்டுள்ள அனைத்து கோர்ட்டுகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.
எல்லா வழக்குகளும் ஒரே வழக்காக இணைத்து விசாரிக்கப்படும் எனவும் அறிவித்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் மார்ச் மாதத்தில் விசாரணை நடத்த பட்டியலிடுமாறும் உத்தரவிட்டனர்.
மேலும், இது தொடர்பான அனைத்து வழக்குகளுக்கும் கூட்டாக மத்திய அரசு அடுத்த மாதம் (பிப்ரவரி) 15-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு பிறப்பித்த பிற உத்தரவுகள்:-
* எந்தவொரு வழக்குதாரரும் நேரில் ஆஜராகி வாதிட முடியாத பட்சத்தில், காணொலிக்காட்சி வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
* இந்த விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான குறிப்புகள், சட்ட விவரங்கள், முன்னுதாரணங்கள் இருந்தால் அவற்றை மத்திய அரசு மற்றும் வழக்குதாரர்கள் என இரு தரப்பும் பகிர்ந்து கொண்டு, சுப்ரீம் கோர்ட்டிலும் தாக்கல் செய்ய வேண்டும்.
* இது தொடர்பான எந்தவொரு வழக்கும் விடுபடாமல் இருப்பதையும், வழக்குகளின் விவரங்கள் உருவாக்கப்பட வேண்டிய தொகுப்புகளில் இணைக்கப்படுவதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.