கம்போடிய அரசரின் இந்திய பயணம் இரு நாடுகளின் நாகரீக பிணைப்பை உறுதிப்படுத்தி உள்ளது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
|இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கம்போடிய அரசரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் ராஷ்டிரபதி பவனில் இன்று வரவேற்றனர்.
புதுடெல்லி,
கம்போடிய அரசர் நரோடம் ஷிகாமணி இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக புதுடெல்லிக்கு நேற்று வருகை தந்த அவரை மத்திய வெளிவிவகார மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.
இந்தியா மற்றும் கம்போடியா இடையேயான நாகரீக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த பயணம் அமையும் என இதுபற்றி, மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளரான அரிந்தம் பக்சி டுவிட்டரில் பதிவிட்டார்.
கம்போடிய அரசரின் இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான 70 ஆண்டு கால தூதரக உறவுகளின் கொண்டாட்டத்தின் உச்ச பகுதியாக இருக்கும். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு பின்னர் கம்போடிய அரசரின் இந்த பயணம் அமைந்து உள்ளது.
கடைசியாக, அரசர் நரோடம் ஷிகாமணியின் தந்தை, கடந்த 1963-ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்து உள்ளார் என மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.
இந்த பயணத்தில், கம்போடிய அரசர் ஷிகாமணியை, மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று நேரில் சந்தித்து பேசினார்.
இதன்பின் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கம்போடிய அரசரை சந்தித்தது கவுரவம் அளிக்கிறது. இரு நாடுகளும் நம்முடைய தூதரக உறவுகளுக்கான, 70-வது ஆண்டு தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளபோது, அவரது இந்த பயணம் நமக்கு இடையேயான வலிமையான நாகரீக பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.
இரு நாடுகளுக்கு இடையேயான தொன்மையான பிணைப்பானது, பாரம்பரிய பாதுகாப்பு, கண்ணி வெடிகளை அகற்றுதல், நீர் பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவதில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
இதற்கு முன்பு, கம்போடிய அரசரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் ராஷ்டிரபதி பவனில் இன்று வரவேற்று சிறப்பித்தனர்.