பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணின் 23 வார கரு ஒப்புதல் இன்றி கலைப்பு - ஐகோர்ட்டு கண்டனம்
|பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் 23 வார கருவை கலைக்க அனுமதிக்கும்படி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட இளம்பெண் கருத்தரித்துள்ளார். ஆனால், கருத்தரித்தது குறித்து 21 வாரங்களுக்கு பின்பே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.
இதனால், 23 வார கருவை கலைக்க பாதிக்கப்பட்ட பெண் முடிவெடுத்துள்ளார். ஆனால், இந்தியாவில் 20 வாரம் வரையிலான கருவை கலைக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 20 வாரங்களுக்கு மேல் கரு வளர்ந்துவிட்டால் கோர்ட்டின் அனுமதி பெற்றுமட்டுமே கருவை கலைக்க முடியும்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் 23 வார கருவை கலைக்க அனுமதிக்கும்படி, கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தான் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாலும், குழந்தையை பராமரிக்க தன்னால் முடியாது என்பதாலும் 23 வார கருவை கலைக்க அனுமதிக்கும்படி பாதிக்கப்பட்ட இளம்பெண் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த மாதம் 29ம் தேதி விசாரித்த ஐகோர்ட்டு இளம்பெண்ணின் 23 வார கருவை கலைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய டாக்டர்கள் அடங்கிய குழு அமைக்கும்படியும், குழுவின் ஆய்வு முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டது. மேலும், கருவை கலைத்தால் பெண்ணுக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்தும் 2ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி கோர்ட்டு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் 23 வார கருவை கலைத்துவிட்டதாக ஐகோர்ட்டில் மேற்குவங்காள அரசு அறிக்கை தாக்கல் செய்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ஐகோர்ட்டு மாநில அரசுக்கும், கருக்கலைப்பு சிகிச்சையில் ஈடுபட்ட டாக்டர்களுக்கும் கண்டனம் தெரிவித்தது.
கருவை கலைத்தால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மட்டுமே உத்தரவிட்டிருந்ததாகவும், கருவை கலைக்க உத்தரவிடவில்லை என்றும் கோர்ட்டு சாடியது.
உரிய ஒப்புதலின்றி டாக்டர்கள் இளம்பெண்ணின் கருவை கலைத்ததற்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கோர்ட்டு அனுமதியின்றி வேகமாக இளம்பெண்ணின் கருவை கலைத்ததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து 9ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.